Home நாடு ஒராங் ஊத்தான்களை வைத்து சுயலாபம் தேடும் பிரபல 5 நட்சத்திர விடுதி – அரசு சாரா...

ஒராங் ஊத்தான்களை வைத்து சுயலாபம் தேடும் பிரபல 5 நட்சத்திர விடுதி – அரசு சாரா அமைப்பு புகார்

844
0
SHARE
Ad

shangri-la-s-rasa-riaகோத்தா கினபாலு, ஜூலை 23 – அனாதையாய் விடப்பட்ட மனிதக் குரங்குகளுக்கு ( orang utans) மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி, சுயலாபத்திற்குப் பயன்படுத்துவதாக பிரபல ஆடம்பர தங்கும் விடுதியான ஷங்ரி லா ராசா ரியா ரிசார்ட் மீது அரசு சாரா அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

பிரண்ட்ஸ் ஆஃப் ஒராங் த ஊத்தான் (Friends of the Orang-utan) என்ற அந்த அமைப்பின் இயக்குநர் உப்ரெஷ்பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒராங்கு ஊத்தான்களை ஷங்ரி லா குழுமம் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றது. ஒராங் ஊத்தான் வகைக் குரங்குகளுக்கு நல்வாழ்வு அளிப்பதாகக் கூறி பல வருடங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றது. ஒராங் ஊத்தான்களுக்கு ஷங்ரி லா குழுமம் மறுவாழ்வு அளிக்கவில்லை. மாறாக அவைகளைத் தனது சொத்தாக்கிக் கொண்டு லாப நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றது. இது ஒரு மோசடி”என்று தெரிவித்துள்ளார்.

ராசா ரியா ரிசார்ட்டின் “ஒராங் ஊத்தான் பராமரிப்பு” திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், அனாதைகளாய் விடப்பட்ட ஒராங் ஊத்தான்களுக்கு மறுவாழ்வு அளித்து, பின்னர் அவைகளை சண்டாக்கானில் உள்ள மறுவாழ்வு மையத்தில் (Sepilok Orang-utan Rehabilitation Centre – SORC) கொண்டு போய் விடுவது தான். அங்கு அவைகளுக்கு மேலும் நல்வாழ்விற்கான பராமரிப்புகள் செய்து கொடுக்கப்படும் என்பது ஷங்ரி லா தங்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், உப்ரெஷ்பால் அதை மறுக்கிறார். ஒராங் ஊத்தான்களைக் காட்டி வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கும், தங்கும் ஆடம்பரத் தங்கும்விடுதியை சுற்றுலாத் தளம் போல் காட்டி லாபம் ஈட்டுவதற்கும் தான் அங்கு ஒராங் ஊத்தான்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதாக உப்ரெஷ்பால் குற்றம் சாட்டுகின்றார்.

மேலும், “கடந்த 10 ஆண்டுகளாக சண்டாக்கான் மறுவாழ்வு மையத்தில் இருந்து அனாதைகளாய் இருக்கும் ஒராங் ஊத்தான்கள் ராசா ரியா ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு அவைகளுக்கு முறையான பராமரிப்பும், மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றனவா?” என்றும் உப்ரெஷ்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு, ராசா ரியா ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல ஒராங் ஊத்தான்கள் இறந்து போனது குறித்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வாய் திறக்க மறுப்பதாகவும் உப்ரெஷ்பால் குறிப்பிட்டுள்ளார்.

“சண்டாக்கான் மறுவாழ்வு மையம் இனி ஒராங் ஊத்தான்களை ரிசார்ட்டுக்கு அனுப்பக் கூடாது. ஏற்கனவே அங்கு இருக்கும் ஒராங் ஊத்தான்களை மீட்டுக் கொள்ள வேண்டும். அதுவரை நாங்கள் எங்களது பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டு தான் இருப்போம்” என்றும் உப்ரெஷ்பால் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.