ஐதராபாத், ஜூலை 23- ஓராண்டுக்கு முன் ஒரே மாநிலமாக இருந்த ஆந்திரா, தற்போது இருவேறு மாநிலமாகப் பிரிபட்டு, ஒன்று ஆந்திராவாகவும், மற்றொன்று தெலுங்கானாவாகவும் மாறியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் இதில் ஆந்திர மாநிலத்தில் சேர்ந்துள்ளது.மேலும், அக்கோவில் அரசாங்கத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது.
இப்பிரிவினைக்குப் பின் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவும் எலியும் பூனையுமாக மாறி அடிக்கடி மோதிக் கொள்கின்றனர்.
இந்நிலையில்,ஆந்திர மாநிலத்திற்குப் போட்டியாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலைப் போன்று தெலுங்கானா மாநிலத்திலும் பிரம்மாண்டமான கோவிலைக் கட்ட அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
இதற்காகத் தெலுங்கானா மாநிலத்தில் யாதகிரிகுட்டாவில் உள்ள வெங்கடாசலபதி கோவிலைத் திருப்பதிக்கு இணையாக உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.