மாலி, ஜூலை 25 – முன்னாள் மாலத்தீவு அதிபர் முகமது நஷீத், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது குற்றவியல் நீதிபதி ஒருவரைக் கைது செய்து, காவலில் வைத்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட 13 வரு சிறை தண்டனை, வீட்டுக் காவலாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், 13 வருட தண்டனையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகமது நஷீத், கடந்த 2012-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அதிபர் பதவியில் இருந்தபோது, அந்நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, முகமது நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது. 2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார்.
நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டது தொடர்பாக முகமது நஷீத்தை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மாலத்தீவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், நஷீத்தின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், நஷீத்தின் வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், தற்போது அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை, நஷீத்தின் வழக்கறிஞர் ஜாரேட் கென்செர் உறுதி செய்துள்ளார்.