Home இந்தியா யாகூப் மேமனுக்கு ஆதரவாகக் கருத்து : எதிர்ப்புப் போராட்டத்தால் சல்மான்கான் மன்னிப்புக் கேட்டார்!

யாகூப் மேமனுக்கு ஆதரவாகக் கருத்து : எதிர்ப்புப் போராட்டத்தால் சல்மான்கான் மன்னிப்புக் கேட்டார்!

644
0
SHARE
Ad

150615_salmanமும்பை, ஜூலை 27- தூக்குத் தண்டனை பெற்ற, மும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததால் நடிகர் சல்மான்கானுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

வரும் 30- ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ள யாகூப் மேமனுக்கு ஆதரவாக, இந்தி நடிகர் சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில்: “யாகூப் மேமனின் சகோதரர் டைகர் மேமன் செய்த குற்றத்திற்காக அப்பாவியான யாகூப் மேமனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

யாகூப் மேமனை விட்டு விட்டு, தலைமறைவாக உள்ள டைகர் மேமனைக் கண்டுபிடித்துத் தூக்கிலிடுங்கள். ஒரு அப்பாவியைக் கொல்வதென்பது ஒட்டு மொத்த மனிதாபிமானத்தையே கொல்வதற்குச் சமமாகும்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இக்கருத்திற்குப் பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். சல்மான்கானின் திரைப்படச் சுவரொட்டிகளைச் சிவசேனா கட்சியினர் கிழித்து எறிந்தனர். மேலும், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பஜ்ரங்கி பைஜான்’ படம் திரையிடப்பட்ட தியேட்டரிலும் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மும்பை பாந்திராவில் சல்மான்கான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு முன்பும் சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்னுடைய கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

சிலர் சல்மான்கானின் உருவப் பொம்மையை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அவருடைய வீட்டிற்குக் காவல்துறையினரரால் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் உஜ்வால் நிகாமும் சல்மான்கானின் இந்தக் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

“சல்மான்கானின் கருத்து இந்திய நீதித்துறையின் கண்ணியத்தைக் குறைப்பதாக உள்ளது.
சல்மான்கான் மிகவும் பிரபலமானவர்.இத்தகைய கருத்தால் அவர் தன்னுடைய ரசிகர்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது.காலதாமதம் இல்லாமல் அவர் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார் அவர்.

இதைத்தொடர்ந்து, யாகூப் மேமன் பற்றிய தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட சல்மான்கான், இதற்காகப் பகிரங்க மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

மேலும், யாகூப் மேமனைத் தான் ‘அப்பாவி’ எனக் கூறவில்லை என்றும், நாட்டின் நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் சல்மான்கான் டுவிட்டரில் மற்றொரு பதிவை வெளியிட்டார்.