காபூல், ஜூலை 30 – தலிபான் தலைவர் முல்லா ஓமர், கடந்த 2013-ம் ஆண்டே பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பலியாகிவிட்டார் என ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இது தொடர்பாக, ஆப்கன் பாதுகாப்பு சேவையின் செய்தித்தொடர்பாளர் அப்துல் ஹசிப் சித்திக் கூறுகையில், “முல்லா ஓமர், உடல் நலக்குறைவால் கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்” என்று கூறியுள்ளார்.
ஹசிப் சித்திக்கின் இந்த கூற்றை ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியின் அரசு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. அதேபோல், தலிபான்களின் முக்கிய குழுக்களும், முல்லா ஓமரின் இடத்தை ஈடு செய்யக் கூடிய தலைவரை விரைவில் நியமிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இதன்மூலம், தீவிரவாதிகளின் மறைவிடமாக பாகிஸ்தான் இருந்து வருவது உறுதியாகி உள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை வழக்கம்போல் மறுத்துள்ள பாகிஸ்தான், “ஓமர், பாகிஸ்தான் மருத்துவமனையில் இறந்ததாகக் கூறப்படுவது வெறும் யூகம் தான். இரு நாடுகளின் பேச்சுவார்த்தைகளை குழப்பும் நோக்கத்துடன் இது போன்ற வதந்திகள் ஏற்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.