கோலாலம்பூர், ஜூலை 31 – ஏர் ஆசியா நிறுவனம், குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையத்தை (கேஎல்ஐஏ 2) பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கோரியுள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், கடந்த ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையம், நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரை கடந்து தான் விமானங்கள் செல்வதாகவும், ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
இவ்வாறு, கேஎல்ஐஏ 2-வில் இயங்குவது குறித்து, ஏர் ஆசியா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், தற்போது இழப்பீடு கோரியுள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனம் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸிற்கு அனுப்பி உள்ள கோரிக்கைக் கடிதத்தில், “மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் ஒப்பந்த கடமைகள் மற்றும் பாதுகாப்புக் கடமைகளை நிறைவேற்றத் தவறி விட்டது. இதனால், ஏர் ஆசியா பல்வேறு சிரமங்களையும், பொருளாதார நஷ்டத்தையும் சந்தித்துள்ளது. எம்ஏஎச்பி-ன் இந்த விதிமுறை மீறல்களினால், ஏர் ஆசியாவிற்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயருக்கு களங்கம் வந்துவிட்டது” என்று அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஏர் ஆசியாவின் இந்த கோரிக்கை பற்றி எம்ஏஎச்பி கூறுகையில், ” ஏர் ஆசியாவின் இந்த கோரிக்கை பற்றி எங்கள் நிறுவனம், வழக்கறிஞர்களுடன் பரிசீலித்து வருகிறது. இது பற்றிய கூடுதலான தகவல்கள் விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது.