லண்டன், ஆகஸ்ட் 6 – கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி பின்வாங்கத் தொடங்கியது. அதன் கடன் மதிப்பீடுகள் அச்சுறுத்தலான நிலைக்கு சென்று கொண்டிருந்தன. இவை அனைத்திற்குமான காரணம் என்ன? என்பது பற்றி தொடர் விசாரணைகள் நடந்த வண்ணம் இருந்தன. அந்த விசாரணையில், அந்நாட்டின் நிதி விவகாரங்களில் ஆளுமை செலுத்தி வந்த சிட்டி குழுமத்தின் நிர்வாகிகள், மிகப் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
மேற்கொண்டு நடந்த தொடர் விசாரணையில், டாம் ஹேய்ஸ் என்ற சிட்டி குழுமத்தின் வர்த்தகர் கைதானார். நிதி உலகில், லைபரின் (London Interbank Offered Rate) முக்கிய வட்டி விகிதமான பெஞ்ச்மார்க் தொடர்பான மோசடியில் டாம் ஹேய்ஸ் ஈடுபட்டது தெரியவந்தது. டாம் ஹேய்ஸும், தான் லைபர் (LIBOR) வட்டி விகிதங்களை சூழ்ச்சியுடன் கையாண்டதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் தான் அவருக்கு, 14 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“நம்பிக்கையும், உண்மையும் பறிபோவது பேராபத்தை விளைவிக்கும். நாட்டின், நிதி விவகாரங்களில் லைபரின் பங்கு மிக முக்கியமானது. அத்தைகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் நம்பகத்தன்மை பறிபோவதற்கு டாம் ஹேய்ஸ் காரணமாகி விட்டார்” என்று நிதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
உலக அளவில் புகழ்பெற்ற லைபர் வட்டி விகிதங்களில் மோசடி செய்து, 14 வருட சிறை தண்டனை பெறும் முதல் நபர் டாம் ஹேய்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.