ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுவித்ததை எதிர்த்துக் கர்நாடகா அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதற்கான விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், அவ்வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்தும் கர்நாடகா அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகா அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தயாரித்த இம்மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசின் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் எஸ்.ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று உச்சநீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
“சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ், மீடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், லெக்ஸ் பிராபர்ட்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா என்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் பினாமி நிறுவனங்களாகும்.
சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகா உயர்நீதி மன்றம் இந்த 6 நிறுவனங்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இந்தத் தீர்ப்பில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதால், இந்த 6 நிறுவனங்களையும் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்தது அடிப்படையில் தவறானதாகும். எனவே, இந்த 6 நிறுவனங்களையும் வழக்கில் இணைத்துக் கொள்வதோடு, கடந்த மே மாதம் 11–ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.