கோலாலம்பூர் – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இரு அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகங்களின் முன்பு பிகேஆர் சார்பில் பேரணி நடத்தப்படும் என அக்கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா தெரிவித்துள்ளார்.
இரு அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டதையொட்டி பிகேஆர் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரு அதிகாரிகளும் தன்னையும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்தவுடன், இடமாற்ற நடவடிக்கை நிகழ்ந்திருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டும். இதன் மூலம், ஊழல் தடுப்பு ஆணையத்தின் உறுப்பினர்களை எச்சரிக்கும் விதமாகவே தண்டனை நடவடிக்கை மற்றும் அரசியல் தலையீடு நிகழ்ந்துள்ளதாக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படும். எனினும் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுக்கான அச்சுறுத்தலும், அங்கு அரசியல் குறுக்கீடு இருப்பதும் தெளிவாகத் தெரிய வருவதால், பிகேஆர் உறுப்பினர்கள் அனைவரும் அந்த ஆணையத்திற்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிட உள்ளேன்,” என்று வான் அசிசா மேலும் தெரிவித்துள்ளார்.