Home Featured நாடு எம்எச் 370: கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே மர்மங்கள் விலகும் – நிபுணர்கள் கருத்து

எம்எச் 370: கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே மர்மங்கள் விலகும் – நிபுணர்கள் கருத்து

573
0
SHARE
Ad

pesawat-mas-misteri-hilang-mh370கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மாயமான எம்எச்370 விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே, அது குறித்த மர்மங்கள் விலகும், தெளிவு பிறக்கும் என விமானப் போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த விமான பாகம் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு எம்எச்370 விமானத்தினுடையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். விமானத்தின் பல்வேறு அம்சங்கள் குறைத்த விஷயங்கள் அதில் பதிவாகி இருக்கும் என்பதால், அதை ஆய்வுக்குட்படுத்தும் போது, விமானம் மாயமானது குறித்து தெளிவு பிறக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

#TamilSchoolmychoice

“எம்எச்370 விமானத்தின் முக்கிய பாகங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைய வேண்டும். விமானம் கண்டுபிடிக்கப்பட்டது எனில், கருப்புப் பெட்டியும் நிச்சயம் கண்டுபிடிக்கப்படும். விமானம் எத்தகைய மோசமான விபத்தை எதிர்கொண்டது என்பதைப் பொறுத்தே, கருப்புப் பெட்டிக்கு சேதம் ஏற்படும். ஒருவேளை கருப்புப் பெட்டி நல்ல நிலையில் கண்டெடுக்கப்பட்டால் அதில் உள்ள தகவல்களை பெற முடியும்” என்கிறார் கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின், மலேசிய வான் தொழில்நுட்ப மையத்தின் முதன்மை சிறப்பு நிபுணர் அகமட் மௌலான் பர்டாய்.

விமான கருப்புப் பெட்டியானது கடுங் குளிர் அல்லது வெப்பம் ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்கும் என்றும், அது அவ்வளவு சுலபத்தில் சேதமடையாது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“விமானத்தை தேடும் பணியில் அண்மைக்காலமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேடுதல் நடவடிக்கையை மேம்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. விமானம் இருக்கும் இடத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எனினும் ஆழ்கடலில் உள்ள அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல,” என்கிறார் பேராசிரியர்களின் தேசியக் கழகம், அரசியல், பாதுகாப்பு மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குழுவின் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் முஸ்தஃபா இஷாக்.