புதுடில்லி, ஆகஸ்ட் 13- இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து மரண தண்டனையை நீக்கக் கோரித் தனி நபர் மசோதாவைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
மரண தண்டனை கூடாதெனவும், எந்தக் குற்றத்திற்கும் மரண தண்டனை தீர்வாகாது எனவும் பல சமூக அமைப்பினரும் அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மையில் மும்பை குண்டு வெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கும் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்தன.
மரண தண்டனையை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்தே நீக்க விட வேண்டும் எனச் சில முக்கிய அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன.
இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இன்று காலை, மரண தண்டனையை நீக்கக் கோரும் தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா அடுத்த கூட்டத்தொடரின் முதல் வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு மசோதா மீது விவாதம் நடைபெறும்.
இந்த மசோதாவுக்கு ஆதரவு கிடைத்தால், அது சட்ட வடிவம் பெறுவது உறுதி.
இதற்கு முன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருநங்கைகள் உரிமைகளுக்காகத் தனி நபர் சட்ட மசோதா தாக்கல் செய்து, அது மீதான விவாதம் நடைபெற்று, முடிவில் அம்மசோதா ஒரு மனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.