கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – “ஏர் ஆசியா நிறுவனம், கேஎல்ஐஏ 2 தொடர்பாக இழப்பீடு கோருவது எந்தவகையிலும் நியாயமில்லை. எனவே, எந்தவொரு இழப்பீடும் கொடுக்க முடியாது” என மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எம்ஏஎச்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இழப்பீடு தொடர்பாக ஏர் ஆசியா அனுப்பி உள்ள கோரிக்கை கடிதம் நியாயமற்றது. மேலும், எந்தவகையில் ஏற்புடையதாக இல்லை. அவர்கள் இழப்பீடு கோரியுள்ள விவகாரத்தில், தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான சான்றுகளை குறிப்பிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31-ம் தேதி, எம்ஏஎச்பி-யிடம் ஏர் ஆசியா நிறுவனம், குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையத்தை (கேஎல்ஐஏ 2) பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கோரியது குறிப்பிடத்தக்கது.