சியோல்- எந்த நேரமும் போர் மூளலாம் என்கிற ஆபத்தின் விளிம்பில் இருந்த வடகொரியா, தென்கொரியா இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
1950-ஆம் ஆண்டு முதல் 1953-ஆம் ஆண்டு வரை வடகொரியா- தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடுமையான யுத்தம் நடந்தது. அந்தப் போருக்குப் பின்னர் இரு நாடுகளும் அவ்வப்போது உரசிக் கொள்வது வழக்கம் தான் என்றாலும், திடீரென இரு தினங்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கிடையே மீண்டும் போர் மூளும் சூழ்நிலை உருவானது.
தென்கொரியாவில் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி, தென்கொரிய வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இதற்கு வட கொரியா தான் காரணம் எனத் தென்கொரியா, கொரிய எல்லையில் ஒலிபெருக்கிப் பிரசாரம் செய்தது.
இதற்கு வடகொரியா ஆட்சேபனை தெரிவித்ததோடு, தென்கொரியாவை நோக்கிப் பீரங்கித் தாக்குதல் தொடுத்தது.தென்கொரியாவும் பதிலுக்குப் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து பலத்த போர் மூளும் அபாயம் உண்டானது. இரு நாடுகளும் எல்லையில் தங்களது படைகளைக் குவித்தன.
இந்நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் இரு நாடுகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது. கண்ணிவெடித் தாக்குதலில் தென்கொரிய வீரர்கள் காயம் அடைந்த சம்பவத்துக்கு வடகொரியா வருத்தம் தெரிவித்தது.
தென்கொரியாவும் வடகொரியாவுக்கு எதிரான ஒலிபெருக்கிப் பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாகக் கூறியது. இதன்மூலம் இரு நாடுகளும் சமரசம் செய்து கொண்டன.
இருநாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பதால், கொரிய தீபகற்பப் பகுதியில் சில நாட்களாக நிலவி வந்தபோர்ப் பதற்றம் தணிந்துள்ளது.