Home உலகம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கையில் அமெரிக்கா பின்வாங்கியது!

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கையில் அமெரிக்கா பின்வாங்கியது!

626
0
SHARE
Ad

us-flagகொழும்பு – இலங்கையில் 2009–ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பலரையும் கொன்று குவித்தனர்.

இந்த இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த ஆண்டு அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றவும்பட்டது.

ஆனால், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேனா அதிபராகப் பதவி ஏற்ற உடன், அமெரிக்கா, இலங்கையுடனான மோதல் போக்கைக் கைவிட்டு, இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் இதுகுறித்து இலங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

amer“இலங்கையில் 2009–ஆம் ஆண்டு நடந்த மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு காணப் புதிதாகப் பதவி ஏற்ற அரசுக்குப் போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால், போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை இலங்கை அரசே நடத்தும் வகையிலான தீர்மானத்தை அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

சர்வதேச நாடுகளுடனும் இது தொடர்பாக ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையில் அமெரிக்காவின் போக்கு திடீரென இலங்கைக்கு ஆதரவாக மாறியுள்ளதால், ஈழத்தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா துரோகம் இழைத்து விட்டதாகத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழப் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சிங்கள அரசோடு, அமெரிக்கா கைகோர்த்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த அரசியல் மற்றும் பூகோள அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தமிழர்களைப் பகடைக்காயாக அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.