கோலாலம்பூர் – பாஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய உறுப்பினர்களான முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் மற்றும் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் கமாருடின் ஜாஃபர் ஆகிய இருவரும், பாஸ் கட்சியிலிருந்து விலகி பிகேஆரில் இணையப் போவதாக இன்று அறிவித்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு வரை அம்னோ உறுப்பினராக இருந்த முகமட் தாயிப் என்ற மாட் தாயிப், பின்னர் பாஸ் கட்சியில் இணைந்தார்.
அதே போல், கமாருடினும் முன்னாள் அம்னோ உறுப்பினர் தான். பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மிகவும் நெருக்கமானவர்.
கடந்த 1998-ம் ஆண்டு துணைப் பிரதமர் பதவியிலிருந்து அன்வார் நீக்கப்பட்ட போது, அம்னோவிலிருந்து விலகி பாஸ் கட்சியில் கமாருடின் தன்னை இணைத்துக் கொண்டார்.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், “கெஅடிலான் தலைமைத்துவ அலுவலகத்தை வலுப்படுத்துபவராகவும், அரசியல் மற்றும் கொள்கை இயக்குநராகச் செயல்பட்டு தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு ஆலோசனைகள் கூறுபவராகவும் கமாருடின் செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.