நியூயார்க் – அமெரிக்காவின் உலக வர்த்தக மையமாக விளங்கிய இரட்டைக் கோபுரத்தின் மீது அல்கய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதித் தகர்த்த 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2001-ஆம் ஆண்டு 11-ஆம் தேதி காலை 8.46 மணிக்கு அல்கய்தா பயங்கரவாதிகள் 19 பேர், அமெரிக்காவுக்குச் சொந்தமான நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்தினர்.
முதலிரண்டு விமானங்களைத் தாழ்வாகப் பறக்க வைத்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரக் கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோதச் செய்தனர்.
மோதிய 1 மணி 42 நிமிடத்துக்குள், தலா 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாயின. மேலும், அருகிலிருந்த 10 கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகின.
இதில் இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மையக் கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியானார்கள்.
மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் இறந்தனர்.
நான்காவது விமானத்தை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மீது மோதி வெடிக்க வைக்க அல்கய்தா தீவிரவாதிகள் தீட்டிய சதி, அதே விமானத்தில் பயணம் செய்த நாட்டுப்பற்று மிக்க அமெரிக்கப் பிரஜைகளால் முறியடிக்கப்பட்டது.
கடத்திய பயங்கரவாதிகளுக்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் சண்டை நடந்தது. முடிவில் இதுவும் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகித் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியானார்கள்.
அல்கய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பழிதீர்க்க, இந்தக் கோரச் சம்பவம் நிறைவேறியது.
இச்சம்பவம் உலகையே நிலைகுலையச் செய்தது. அதன் பிறகே தீவிரவாததிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டன.