கோலாலம்பூர் – நீண்டகாலமாக எதிர்பார்பில் இருந்து வரும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 (Office 2016) எதிர்வரும் 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விண்டோஸ் 10 வெளியீட்டிற்குப் பிறகு, அதிவிரைவாக செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அடுத்தடுத்த தனது தயாரிப்புகளை வெளியிட காத்திருக்கிறது. புதிய மேம்பாடுகளுடன் வெளிவர இருக்கும் ஆபிஸ் 2016, பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்டு கூறவேண்டுமென்றால், ஏற்கனவே இருக்கும் பல்வேறு பயன்பாடுகள் மட்டுமல்லாமல், மாற்றங்கள் செய்யப்படும் ஆவணங்களை ஒரே சமயத்தில் கிளவுட் சேமிப்பான ஒன்-டிரைவிலும் (One Drive) ஒத்திசைவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த வெளியீட்டிற்கு இடையே மைக்ரோசாப்ட் நிறுவனம், மற்றொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. நாதெல்லா தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, அண்டிரொய்டு மட்டுமல்லாமல் ஐஓஎஸ் தளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அதன்படி, ஆப்பிள் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் புதிய மென்பொருளான ஐஓஎஸ் 9 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த தளத்திற்கு தேவையான எம்எஸ் ஆபிஸ் பயன்பாடுகளான வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் எக்ஸல், அவுட்லுக் போன்றவை பல்வேறு சிறப்பான மாற்றங்களுடன் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.