Home நாடு “சிவப்பு ஆடை பேரணிக்கு மஇகா எதிர்ப்பு – மலேசிய தினத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்” – டாக்டர்...

“சிவப்பு ஆடை பேரணிக்கு மஇகா எதிர்ப்பு – மலேசிய தினத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்” – டாக்டர் சுப்ரா அறைகூவல்!

552
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு ஆடை பேரணிக்கு மஇகா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்துள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மலேசிய தினத்தை முன்னிட்டு, ஒற்றுமையை வலுப்படுத்துவோம், வீதிப் பேரணிகளுக்கு மறுப்பு சொல்வோம் என மலேசியர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

இதன் தொடர்பில் இன்று விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் டாக்டர் சுப்ரா “வீதிப் பேரணிகளை நடத்தும் கலாச்சாரத்திற்கு மஇகா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. மலேசிய தினம் ஒற்றுமை தினமாக இருக்க வேண்டுமே தவிர வீதி ஆர்ப்பாட்டங்களாகவும் பேரணியாகவும் இருக்கக்கூடாது” என்றும் கூறியுள்ளார்.

தனது பத்திரிக்கை அறிக்கையில் டாக்டர் சுப்ரா மேலும் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“வீதி ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் கொண்ட கலாச்சாரங்களை எதிர்க்கும் ம.இ.கா கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற “பெர்சே” பேரணிக்கும் தனது மறுப்பைத் தெரிவித்திருந்தது. மஇகா உறுப்பினர்கள் யாரும் பெர்சே பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அவ்வாறு கலந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் மஇகா விடுத்திருந்தது.

தற்பொழுது நாட்டிற்கு மற்றுமொரு மிரட்டலாக அமைந்திருப்பது இந்த “சிவப்பு சட்டை” பேரணியாகும். மஞ்சள் சட்டை பேரணியாக நடைபெற்ற பெர்சேயிற்கு நேர் எதிரான பேரணியாக இது நடைபெறுகின்றது.

அதே வேளையில் பெர்சே பேரணி போன்ற வீதிப் போராட்டங்களின்வழி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளையும் மஇகா கடுமையாக எதிர்க்கின்றது. அந்த பெர்சே பேரணியில் சில தலைவர்களின் படங்களைக் கொண்ட பதாகைகள் அவமதிக்கப்பட்டதற்கும் மஇகா கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றது.

“இந்த பேரணியானது இன அடிப்படையைச் சார்ந்ததாக அமைந்திருப்பதால் இதனை நிச்சயம் நடக்க நாம் அனுமதிக்கக்கூடாது. இந்தப் பேரணியில் ஒரு சிறிய சம்பவம் தவறாக நடந்தாலும், அந்த சிறிய தீப்பொறி பெருநெருப்பையே உண்டாக்கிவிடும் என்பதையும் நாட்டிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்பதையும்  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிறு தவறு நடந்தால் கூட அதனால் பொதுமக்கள் நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கப்படுவர்”

“எனவே, இந்த “சிவப்பு சட்டை” பேரணியை ம.இ.கா முழுமையாக, எதிர்க்கிறது. நம்முடைய எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு நிச்சயம் மாற்று வழிகள் உண்டு. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் திறம்பட பேசக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதிருப்திகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் சட்டத்திற்குப் புறம்பாக கூட்டப்படும் கூட்டங்களில் காட்டுவதை விட சரியான இடத்தில் விவாதிப்பதே அறிவார்ந்த செயலாகும்.”

அவ்வாறு நமது கருத்துகளைத் தெரிவிக்க சரியான களங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருப்பின் அதற்கு மாற்றாக புதிய கருத்துப் பரிமாற்ற களங்களை உருவாக்க நாம் நடவடிக்கை எடுக்கலாம். விவாத மேடைகளில் விவாதிப்பதுதான் சிறந்ததே தவிர வீதிப் பேரணிகள் தேவையில்லை.

“நம் நாடு பல இன மக்களைக் கொண்ட நாடாகும். இங்கு இன ரீதியிலான பேரணிகளை நடத்துவது நாட்டு மக்களிடையே மிகப்பெரிய பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தும். வருகின்ற 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தப் பேரணியைக் காவல்துறையினர் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். ஏனெனில், இந்தப் பேரணியானது தீய நோக்கத்தோடு இருப்பது மட்டுமின்றி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் இன ஒற்றுமையையும் சீர்குலைக்கவிருக்கும் தேவையில்லாத சம்பவங்களை ஏற்படுத்தக்கூடும்.”

“இந்தப் பேரணி தொடர்பாக, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். குறிப்பாக இன அடிப்படையில் தவறுகள் நடக்காமலிருக்கும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் அமைய வேண்டும். தற்பொழுது நாம் நம் நாட்டின் பொருளாதாரத்தை உலக நாடுகளுக்கும் மத்தியில் நிலைபெறச் செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.”

“எனவே, இந்த மலேசிய தினத்தன்று அநாவசிய பேரணிகளை மறந்து நாட்டின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்து, மலேசியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.”