மதுரை – சட்ட ஆணையர் சகாயம் கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் விசாரணை மேற்கொண்டிருக்கும் போது, கிரானைட் எடுக்க நரபலியும் கொடுக்கப்பட்டது என்னும் புகாரும் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சின்னமலம்பட்டியைச் சேர்ந்த சேவற்கொடியான் என்பவர் நரபலி விவகாரத்தை எழுப்பினார். அதைத் தொடர்ந்து அடையாளம் காட்டிய மணிமுத்தாறு மயானத்தில் நரபலி கொடுக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் தோண்டும் பணி நடந்து வருகிறது.
சம்பவ இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
தோண்டும் பணியினைச் சகாயத்தின் விசாரணைக்குழு, காவல்துறை, தடயவியல் துறை, மருத்துவத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட ஐந்து குழுக்கள் கண்காணித்து வருகின்றன.
அங்கு தோண்டத் தோண்ட மனித எலும்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதுவரை நான்கு பேரின் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. அதில் சிறு குழந்தையின் எலும்புக் கூடும் ஒன்று.
அவை மூட்டை கட்டி மதுரைக்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அது மயானப் பகுதி என்பதால் இயற்கையாக இறந்தவர்களின் உடல்களாகவும் இருக்கலாம் என்கிற சந்தேகமும் உண்டு.
ஆய்வுக்குப் பிறகே இறந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரிய வரும். நரபலி கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 12 பேரை நரபலி கொடுத்ததாகச் சேவற்கொடியான் கூறியுள்ளார்.அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து 5 உடல்களுக்கான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. மீதி உடல்களைத் தோண்டி எடுக்கும் பணி நடைபெறுகிறது.