ஹவானா – அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கியூபா நாட்டைச் சென்றடைந்த அவருக்கு கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்தில் அந்நாட்டுத் தேசிய கீதம் இசைக்க, 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க, குழந்தைகள் பூங்கொத்து கொடுக்க அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுவரை போப் பிரான்ஸிஸ் கியூபாவிற்குச் சென்றதில்லை. கம்யூனிஸ் ஆட்சி செய்யும் ஒரு நாட்டிற்கு அவர் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
போப் பிரான்சிஸைத் தலைநகர் ஹவானாவில் அந்நாட்டு அதிபர் ரவுல் காஸ்ட்ரோ வரவேற்றார். அதன்பின்னர் போப், கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து ஹவானாவின் புரட்சி சதுக்கத்தில் நடந்த பேரணியில் போப் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் க்யூபா மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையைத் தளர்த்துவதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது
இந்நிலையில் போப் பிரான்சிஸின் இந்த பத்து நாள் பயணம், எதிரி நாடுகளான அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையேயான சமாதான நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.