சென்னை – தமிழ்நாட்டில் உள்ள 285 இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகம், 264 தாலுகா அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 339 இடங்களில் இ-சேவை மையங்களைத் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அமைத்துள்ளது.
இதில் சென்னையில் உள்ள 54 கோட்ட அலுவலகங்கள் தவிர, மீதமுள்ள 285 இ-சேவை மையங்களில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து ஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதிதாகப் பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் வீட்டு முகவரிக்கான சான்று, பிறப்புச் சான்று, கல்விச் சான்றுகளுக்கான அசல் மற்றும் நகல் சான்றுகளைக் கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் ரூ.1,655 ரொக்கமாகச் செலுத்தி பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விரும்புவோர் இ-சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
பாஸ்போர்ட் அலுவலகமும், அனைத்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால், விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாகக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. விசாரணை முடிந்து அறிக்கையும் இணையதளம் மூலமாக பாஸ்போர்ட் அலுவலகத்துக்குத் திரும்பி வரும் முறையிலான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாஸ்போர்ட் வழங்குவதற்கான காலதாமதம் தவிர்க்கப்படுகிறது.
மேலும், வரும் நவம்பர் மாதம் முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்டிற்கு அனுமதி மறுக்கப்படுவதால், அந்தவகை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பாஸ்போர்ட் அலுவலகங்களில் கொடுத்து புதிய பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்.