கோலாலம்பூர் – முன்னணி ஒளிப்பதிவாளரான விஜய்மில்டனுக்கு இயக்குநராக இது மூன்றாவது படம். தனது இரண்டாவது படமான கோலி சோடாவிற்கும், இப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார்.
அசாத்திய துணிச்சலுடன், எதையும் அதிவேகமாக செய்யும் ஒருவனின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பெண் வருகிறாள். அவளைக் காப்பாற்ற அவனது துணிச்சலும், வீரமும் பயன்பட்டதா? என்பது தான் ’10 எண்றதுக்குள்ள’ படம்.
ஏஆர் முருகதாஸ் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இபடத்தின் ஒளிப்பதிவை பாஸ்கரன் கே.எம் கையாண்டிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
நடிப்பு
‘ஐ’ படத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கடுமையான உழைப்பைக் கொடுத்த விக்ரம், ஒரு மாறுதலுக்காக கொஞ்சம் எளிமையாக, இயல்பாக வந்து போகும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கே உரிய ஸ்டைலான உடல்மொழிகள் இந்த படத்தில் ‘பாண்டு’ என்ற கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறது. என்றாலும் அவரது கதாப்பாத்திரத்திற்கு கடைசி வரை ஒரு நிலையான பெயர் இல்லாமல் கொண்டு சென்றிருப்பது புதுமை.
‘தாண்டவம்’ படத்தில் சற்றே முதிர்ச்சியானத் தோற்றத்தில் காணப்பட்ட விக்ரம், ‘ஐ’ படத்தில் அப்படியே மாற்றி இளமையாக மாறினார். அதையே இந்தப் படத்திலும் தக்க வைத்துள்ளார்.
விக்ரம் செய்யும் சாகசங்களான கார் பறக்கும் காட்சிகள், சண்டைக் காட்சிகள் இவற்றில் லாஜிக் எதையும் பார்க்காமல் ஒரு பொழுதுபோக்காகப் பார்த்தால், அதை ரசிக்கலாம். தொழில்நுட்ப ரீதியிலும் அந்த கார் சேஸிங் காட்சிகள் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. காரணம் இதற்கு முன் இது போன்ற காட்சிகள் பல படங்களில் இன்னும் சிறப்பாக செய்யப்பட்டுவிட்டன.
‘அஞ்சானை’ ஒப்பிடுகையில், சமந்தாவிற்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு நல்ல கதாப்பாத்திரம் கிடைத்திருக்கிறது. அதை அழகாகச் செய்துள்ளார். கார் ஓட்டத் தெரியாமல் தவிப்பது, விக்ரமோடு சிறுபிள்ளைத்தனமாக சண்டையிடுவது என ரசிக்க வைக்கிறார். சமந்தாவின் பின்னணி குரலில் அவ்வளவு ஒரு இளமையும், ஈர்ப்பும் கலந்துள்ளது.இதைத் தவிர படத்தில் சமந்தாவிற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. கதையின் சுவாரஸ்யம் கருதி அதை இங்கே கூற இயலாது.
இது தவிர, படத்தில் பசுபதி, ராகுல் தேவ், அபிமன்யூ ஆகியோர் வரும் காட்சிகள் ரசிக்க வைத்தன.
ஒளிப்பதிவு, இசை
பாஸ்கரன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென அழகாக வந்துள்ளது. குறிப்பாக வட இந்தியா, நேபாள் போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அவ்வளவு அழகு.
இம்மான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. “நான் பாஞ்சா புல்லட்டு தான்” பாடலும், நடன அசைவுகளும் மிகவும் ரசிக்க வைத்தது. கதைக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் சார்மி வரும் தெலுக்கானா பாடல் கொஞ்சம் காரசாரமாக, வித்தியாசமாக இருந்தது.
உத்ராகண்ட்டில் சாதிக் கொலைகளைக் காட்டி கதையைத் தொடங்கி, பின்னர் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் கதையை நகர்த்திக் கொண்டு வந்து மீண்டும் அந்த இடத்தில் முடித்த விதம் சிறப்பு.
‘பத்து எண்றதுக்குள்ள’ எல்லா சாகசங்களையும் செய்யும் அதிவேக வீரனாக விக்ரம் கதாப்பாத்திரம் சொல்லப்பட்டாலும், அந்த கதாப்பாத்திரம் தன்னை நிரூபிக்கத் தேவையான அழுத்தமான காட்சிகளோ, வித்தியாசமான சண்டையோ படத்தில் இல்லை. எல்லா காட்சிகளிலும் சரியான நேரத்தில் விக்ரம் எங்கிருந்தாவது காரில் பறந்து வந்துவிடுகிறார் அவ்வளவு தான். மற்றபடி அங்கு பிரமித்துப் பார்க்கும் படியான விசயங்கள் இல்லை.
விக்ரமின் தைரியத்திற்காக சொல்லப்படும் ப்ளாஷ்பேக்கிலும் ஒரு தெளிவில்லை. எல்லாவற்றிலும் ஆங்காங்கே தொட்டுச் செல்வது போல் திரைக்கதை உள்ளது.
இரண்டாம் பாதியில் கதையின் திருப்பம் என்னவென்று காட்டிவிட்ட பிறகு, வழக்கமாகப் பார்த்து பழகிய காட்சிகள் மூலம் கிளைமாக்ஸ் சண்டையும், படத்தின் முடிவையும் வைத்தது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.
மற்றபடி, படத்தில் கண்ணை மூடிக் கொள்ளும் அளவிற்கு ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ, கொடூரக் கொலைகளோ இல்லை. எனவே கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம்.
மொத்தத்தில் – ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் அதிவேக கதாநாயகன் இருக்கிறார் ஆனால் மிதமான வேகத்தில் சில இடங்களில் மட்டுமே சுவாரஸ்யங்களை சுமந்து கொண்டு பயணிக்கிறது திரைக்கதை!
-ஃபீனிக்ஸ்தாசன்