வாஷிங்டன் – 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த பரபரப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அங்கு தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், பெர்னி ஸாண்டர்சும் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், இருவரும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஹிலாரியின் கை ஓங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதய துணை அதிபர் ஜோ பிடனும் அதிபர் தேர்தலுக்கான களத்தில் இறங்குவார் என்று பரவலாகக் கூறப்பட்டது. இந்த வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன், சமீபத்தில் பொதுவெளியில் ஜோ பிடன் ஆற்றிய உரையில், “அதிபர் தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கப்போவதில்லை. அதற்காக பிரச்சாரங்களில் இருந்து ஒதுங்கி இருக்க மாட்டேன். ஒரு கட்சியாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக நான் என்னால் இயன்ற முயற்சிகளை எடுப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜோ பிடனின் இந்த அறிவிப்பு ஹிலாரிக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஒருவேளை பிடனும் களத்தில் குதித்து இருந்தால், கடுமையான போட்டியை ஹிலாரி சந்திக்க வேண்டி இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.