Home Featured நாடு “ஏன் ஏற்பட்டது எனக்கும் தேவமணிக்கும் இடையிலான போட்டி?” சிறப்பு நேர்காணலில் விளக்குகின்றார் சரவணன்! (பாகம் –...

“ஏன் ஏற்பட்டது எனக்கும் தேவமணிக்கும் இடையிலான போட்டி?” சிறப்பு நேர்காணலில் விளக்குகின்றார் சரவணன்! (பாகம் – 1)

346
0
SHARE

கோலாலம்பூர் – (மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோ எம்.சரவணனுடன் ‘செல்லியல்’  சார்பில் அதன் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய சிறப்பு நேர்காணல்)

Devamany-saravananமஇகா தலைவர்களில் நாம் மிகச் சுலபமாகப் பார்த்துவிடக் கூடியவர்களில் ஒருவர் இளைஞர், விளையாட்டுத்துறை துணையமைச்சரும், கட்சியின் நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவருமான டத்தோ எம்.சரவணன்.

புத்ரா ஜெயாவிலுள்ள அவரது அமைச்சு அலுவலகம் தவிர்த்து,

மஇகா தலைமையகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநில அலுவலகத்தில், மாநிலத் தலைவர் என்ற முறையில் அவருக்கு ஓர் தனி அறை உண்டு.

அதே கட்டிடத்தில் 6வது மாடியில் உள்ள மஇகா தலைமையக அலுவலகத்திலும், உதவித் தலைவர் என்ற முறையில் அவருக்கு ஓர் அறை உண்டு.

ஆனால், அங்கேயெல்லாம் அவர் அமர்ந்திருப்பதைவிட, அதே மஇகா தலைமையகக் கட்டிடத்தை ஒட்டியுள்ள ஒரு சிறிய, திறந்த வெளி தேநீர்க் கடையில் அவர் அமர்ந்திருப்பதுதான் அதிகம்!

அதுதான் சரவணன் கட்சிக்காரர்களை அடிக்கடி சந்திக்கும் அரங்கம்.

Saravanan-deputy election-ballotingகோட்டு சூட்டில் இருந்தாலும், முழுக்கை பாத்தேக் சட்டையில் இருந்தாலும், ஜீன்ஸ், டி-சட்டையை அணிந்திருந்தாலும் அங்கேதான் அமர்ந்திருப்பார் சரவணன்.

மஇகாவில், எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அவர் பெற்ற-பெற்று வரும் வளர்ச்சிக்கும், வெற்றிகளுக்கும் அந்த எளிமையும், இயல்பான பழகும் தன்மையும்தான் காரணங்கள் என்கின்றார்கள் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள்.

நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம்

ஆனாலும், தேசிய துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், செல்லியலுக்கான பிரத்தியேக நேர்காணல் வேண்டும் என்றதும், அவரைப் பிடிப்பது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.

காலில் சக்கரங்கள் கட்டிக்கொண்டு பேராளர்களைச் சந்திக்க நாடு முழுவதும் பறந்து கொண்டிருந்தவரை நாமும் விரட்டி, விரட்டி இறுதியாக செவ்வாய்க்கிழமை (3 நவம்பர் 2015) அன்று, மஇகா தலைமையகத்தில் இருந்தவரை மடக்கிப் பிடித்தோம்.

saravanan-supporters-nominations-nov 2015மஇகா வேட்புமனுத் தாக்கலின்போது உதவித் தலைவர் வேட்பாளர் ஜஸ்பால் சிங் – ஆதரவாளர்களுடன் சரவணன்….

பேராக்கிலுள்ள லுமுட், புருவாஸ் தொகுதிகளுக்கான பயணத்தில் மும்முரமாக இருந்தவரை, மஇகா தலைமையகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள மஇகா கூட்டரசுப் பிரதேச அலுவலகத்தில் வைத்து நமது கேள்விகளை அடுக்கியபோது, எந்தவிதத் தயக்கமும், தடுமாற்றமும் இன்றி, பதிலளிக்கத் தொடங்கினார்,  சரவணன்.

அடுத்த இரண்டு நாட்களில் கட்சியின் இரண்டாவது உயர் பதவிக்கான போட்டி சூடு பிடித்திருக்கும் தகிக்கும் தருணங்களிலும், அதற்கான எந்தவிதப் பரபரப்பும் இன்றி சர்வ சாதாரணமாக அவர் அளித்த பதில்களில் இருந்து, அவருக்குள் குடிகொண்டிருக்கும் ‘வெற்றி பெற்றுவிடுவோம்’ என்ற நம்பிக்கை வெளிப்பட்டது.

Saravanan-Subra-nominations-nov 2015அலுவலகத்தில் தொடங்கிய நேர்காணல் மஇகா தலைமையகக் கட்டிடத்தை ஒட்டியுள்ள அதே தேநீர்க் கடையில், ஒரு தேநீர் அருந்துதலோடுதான் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம்!

முதல் கேள்வியை முன் வைத்தோம்!

கேள்வி: “2013 உதவித் தலைவர் தேர்தலில் ஒரே மேடையில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டே இணைந்து நாடு முழுவதும் நீங்களும் தேவமணியும் வலம் வந்தீர்கள்! ஆனால் இந்த முறை எதிரும் புதிருமாக ஒரே பதவிக்கான போட்டியில்! ஏன் இந்த திருப்பம்? என்ன நடந்தது இடையில்?”

சரவணன்: “2013 தேர்தலில் எங்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதப் பிணக்குகளும் இல்லை. போட்டி முடிவில் நான் உதவித் தலைவராக வெற்றி பெற்றேன். தேவமணி தோல்வியடைந்தார். இப்போது, இந்த முறை வெற்றியடைந்தவன் அடுத்த நிலையிலான உயர்பதவிக்கு முன்னேறிச் செல்வதுதானே முறை? நியாயம்?

Saravanan-Devamany Comboதேர்தலில் உதவித் தலைவராக வெற்றி பெற்ற நான் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விழைய, உதவித் தலைவர் தேர்தலிலேயே தோல்வி கண்ட அவரும் அதே துணைத் தலைவர் பதவிக்கு முன்னேறத் துடிப்பது நியாயமா?

எனவே, வெற்றி பெற்ற நான் துணைத் தலைவர் பதவிக்கு நிற்கின்றேன். தோல்வியடைந்த நீங்கள் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்கு நில்லுங்கள். நானும் ஆதரிக்கின்றேன் என்ற ரீதியில்தான் நான் எனது  வாதத்தை முன் வைத்தேன். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரோ உதவித் தலைவருக்கு நிற்காமல், துணைத் தலைவருக்குத்தான் நிற்பேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சரி! ஜனநாயக முறைப்படி போட்டியைச் சந்திப்போம் என நானும் களத்தில் இறங்கிவிட்டேன்.

தேவமணி உதவித் தலைவர் தேர்தலில் மீண்டும் நின்றிருந்தால் நிச்சயம் நானும் அவரை ஆதரித்திருப்பேன்”

-இரா.முத்தரசன்

டத்தோ சரவணனுடனான நேர்காணல் தொடரும் –

அடுத்து: (பாகம் 2 )
  • துணைத் தலைவர் தேர்தலில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள்?
  • கட்சித் தலைமைக்கான போராட்டத்தில் நீங்கள் டாக்டர் சுப்ராவை ஆதரித்தீர்கள். ஆனால் இப்போது, தேசியத் தலைவரோ துணைத் தலைவர் போட்டியில் நடுநிலை வகிக்கின்றார். இதனால், உங்கள் இருவருக்கும் இடையிலான உறவில் பாதிப்பேதும் ஏற்பட்டுள்ளதா?
  • துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
  • துணைத் தலைவருக்கான போட்டியில் உங்களின் தனித்துவமாக எதைப் பார்க்கின்றீர்கள்?
  • இன்று கட்சிக்கு வெளியே நிற்கும் கணிசமான மஇகா கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் குறித்து உங்களின் முடிவு என்ன?

 

 

Comments