Home Featured தமிழ் நாடு சென்னை சென்ற மலேசியப் பயணிகள் வெள்ளத்தினால் பரிதவிப்பு!

சென்னை சென்ற மலேசியப் பயணிகள் வெள்ளத்தினால் பரிதவிப்பு!

729
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தை உலுக்கி வரும் பெருமழையும், வெள்ளப் பெருக்கும் சென்னை வந்தடையும் விமானப் பயணிகளையும் பெருமளவில் பாதித்துள்ளது. நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த விமானப் பயணிகள் பலர் வெள்ளத்தின் காரணமாக, விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர் எனத் தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.

Chennai-airport-சென்னை விமான நிலையம் (கோப்புப் படம்)

நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மலேசியப் பயணி ஒருவர் செல்லியலைத் தொடர்பு கொண்டு, விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் பல பயணிகள் பரிதவிக்கின்றனர் என்றும், வாடகை வண்டிகள் (டேக்சிகள்) கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தும் விடிய விடிய வாடகை வண்டி கிடைக்காமல், விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், பரிதவித்ததாகத் தெரிவித்துள்ள அந்த பயணி, விடியற்காலையில்தான் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடிந்ததாகக் கூறியிருக்கின்றார்.

வாடகை வண்டி ஓட்டுநர்களையோ, வாடகை வண்டி நிறுவனங்களையோ குற்றம் சொல்வதற்கில்லை, காரணம், நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்திருப்பதால், வாடகை வண்டி ஓட்டுநர்களால் விமான நிலையம் வர முடியவில்லை என சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் விமான நிலையம் வந்தடையும் பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கான பயணப் பாதைகளும் வெள்ளத்தில் சூழ்ந்திருப்பதால், அந்த இடங்களுக்கு பயணிகளைக் கொண்டு செல்ல நினைத்தாலும், வாடகை வண்டிகளால் முடிவதில்லை.

எனவே, சென்னை செல்லும் பயணிகள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என்றும், சென்னையில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் எனவும், சென்னை வரும் மலேசியப் பயணிகளுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது.