Home Featured நாடு சரவணனுக்கு இனி மஇகாவில் என்ன பதவி? மஇகாவினரிடையே ஆர்வம்!

சரவணனுக்கு இனி மஇகாவில் என்ன பதவி? மஇகாவினரிடையே ஆர்வம்!

772
0
SHARE
Ad

Subra-Saravanan Comboகோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் இனி எந்த பதவியின் மூலம் மஇகாவில் தனது சேவையைத் தொடர்வார்?

-மீண்டும் மத்திய செயலவையில் நியமன உறுப்பினராக தேசியத் தலைவரால் நியமிக்கப்படுவாரா?

-மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராக மீண்டும் நியமிக்கப்படுவாரா?

#TamilSchoolmychoice

என்பது போன்ற கேள்விகள் தற்போது மஇகா வட்டாரங்களில் உலா வரத் தொடங்கியுள்ளன.

காரணம், நாளை கூடவிருக்கும் மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் பல முடிவுகளில் – சரவணனுக்கு அடுத்து என்ன பதவி வழங்கப்படலாம் என்ற முடிவும் முக்கிய அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Saravanan-Subra-nominations-nov 2015நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மஇகா மறு-தேர்தல்களைத் தொடர்ந்து, நடைபெறும் முதல் மத்திய செயலவைக் கூட்டம் இது என்பதால் பல்வேறு நியமனங்கள் இந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சரவணனுக்கு இனி மஇகாவில் என்ன பதவி வழங்கப்படும், அல்லது கட்சியின் மத்திய செயலவையில் இடம் பெறாமலேயே, வெளியிலிருந்தே அவர் தனது அரசியல் பணிகளை ஆற்றி வருவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மத்திய செயலவையில் இல்லாத சரவணன்!

மஇகாவின் தேசிய உதவித் தலைவராக 2009ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணன், மஇகா கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தித்திவாங்சா தொகுதியின் தலைவராக நீண்டகாலம் பதவி வகித்து வந்தார். ஆனால், நடந்து முடிந்த மஇகா மறு-தேர்தல்களின்போது, தொகுதித் தலைவர் பதவியை ஆர்.டி.சுந்தரத்துக்கு விட்டுக் கொடுத்தார். கட்சியின் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் எப்படியும் வென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் சரவணன் அந்த முடிவை எடுத்தார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Saravanan - MIC -ஆனால், எதிர்பாராதவிதமாக, 18 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.கே.தேவமணியிடம் தோல்வியைத் தழுவிய சரவணன், அதன் காரணமாக, தற்போது மத்திய செயலவை உறுப்பினர் பதவியில் கூட இல்லை.

அடுத்த கட்சித் தேர்தல்கள் நடைபெறும்போது, அவர் மீண்டும் ஒரு பேராளராகத் தேர்வு பெற்று வந்தால்தான், கட்சியின் தேசிய நிலையிலான பதவிகளில் ஒன்றுக்காகப் போட்டியிட முடியும்.

அதற்காக, மீண்டும் தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அவர் வென்றால்தான் – அல்லது தொகுதியில் பேராளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான், தேசிய நிலையிலான பதவி ஒன்றுக்கு அவர் மீண்டும் போட்டியிட முடியும்.

அல்லது, தேசியத் தலைவரால் நியமன மத்திய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டால், அதன் மூலம் இயல்பாகவே அவர் தேசியப் பேரவைக்கான பேராளராக பேரவையில் கலந்து கொள்ள முடியும். தேசிய நிலையிலான பதவி ஒன்றுக்குப் போட்டியிலும் குதிக்க முடியும்.

சரவணன் மத்திய செயற்குழு உறுப்பினராக தேசியத் தலைவரால் நியமனமா?

Subra-Optometrics Conference-இந்நிலையில், கடந்த காலங்களில் கட்சியின் தலைமைத்துவப் போராட்டங்களில் தனக்கு உறுதுணையாக நின்ற சரவணனை மீண்டும் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக டாக்டர் சுப்ரா எந்தவித தயக்கமுமின்றி நியமித்து மீண்டும் அவரது சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வார் என்றே மஇகாவில் பரவலான கருத்து நிலவுகின்றது.

ஆனால், தேசியத் தலைவர் நியமிக்கக் கூடிய தலைமைச் செயலாளர் – தலைமைப் பொருளாளர், தேசிய தகவல் பிரிவுத் தலைவர் ஆகிய முக்கிய பதவிகளில் ஒன்றுக்கு சரவணன் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் அடுத்து இயல்பாகவே எழுகின்றது.

சரவணன், மத்திய செயற்குழு நியமன உறுப்பினராக தேசியத் தலைவரால் நியமிக்கப்படுவாரா?

அல்லது, தலைமைச் செயலாளர், தலைமைப் பொருளாளர், தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் ஆகிய பதவிகளில் ஒன்றுக்கு நியமிக்கப்படுவாரா?

அல்லது, மத்திய செயற்குழு நியமனப் பதவிகள் எதையும் பெற்றுக் கொள்ளாமல், கட்சியின் உச்சமன்ற அமைப்பில் இடம் பெறாமலேயே வெளியிலிருந்தே தனது அரசியல் பணிகளைத் தொடர்வாரா?

நாளை தெரிந்து விடும்!

-இரா.முத்தரசன்