பெங்களூர் – நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக எழுத்தாளர்களும், கலைஞர்களும் சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அரசிடம் திரும்பக் கொடுத்து வந்தனர். இதற்கு பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகிய மூன்று முற்போக்கு சிந்தனைவாதிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதே காரணம். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, இம்மூவரையும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்து இருக்கலாம் என வலுவான சந்தேகம் கிளம்பி உள்ளது.
கன்னட முற்போக்கு எழுத்தாளரான எம்.எம்.கல்புர்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி கர்நாடகத்தின் தார்வாத் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல், கடந்த பிப்ரவரி மாதம், மும்பையில், மோட்டார் சைக்கிளில் வந்த சில மர்ம நபர்களால், கம்யூனிஸ்ட் கழகத்தைச் சார்ந்த, அரசியல்வாதி கோவிந்த் பன்சாரே, அவரது மனைவி உமா பன்சாரேவுடன் சேர்த்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதேபோல் 2013-ல், புனேவில், பிரபல முற்போக்கு எழுத்தாளரான நரேந்தர தபோல்கர், நடுவீதியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மேற்கூறிய இம்மூவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, வலதுசாரி அரசியலை கடுமையாக விமர்சிப்பது, முற்போக்கான கருத்துக்களைத் தெரிவிப்பது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், இவர்கள் மூவரையும் கொல்லப் பயன்படுத்திய கொலை ஆயுதம், 7.65 மில்லி மீட்டர் ரக நாட்டுத் துப்பாக்கி என தெரிய வந்துள்ளது.
மூவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள், அந்த ரகத் துப்பாக்கி என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம், நாடு முழுவதும் கிளர்ச்சியைத் தூண்டுவதற்காக எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.