சென்னை – தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சியை சகாயம் ஐஏஎஸ் மட்டுமே கொடுக்க முடியும். அவர் கண்டிப்பாக அரசியலில் இறங்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் சென்னையில் மிகப் பெரிய பேரணி ஒன்று நடந்தது. மக்கள் நலக் கூட்டணி, நேர்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால், சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், சகாயம் குறித்த சமீபத்திய பரபரப்பிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியில், “பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சகாயம் ஐஏஎஸ், முதல் வேட்பாளராக வரவேண்டும் என சொல்கிறார்கள். குறிப்பாக அன்புமணியின் வளர்ச்சியை பிடிக்காத திமுகவினர்தான் இதன் பின்னணியில் உள்ளனர்.”
“சகாயம், கிரானைட் ஊழல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டவர். அவர் தனது அறிக்கையை, தற்போதுதான் தாக்கல் செய்துள்ளார். அவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சகாயத்தால் எப்படி ஒரு கட்சியை இப்போது தொடங்கி, மக்களைச் சந்திக்க முடியும்?”
“எனக்கு தெரிந்தவரை சகாயத்திற்கு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. அவர் குடிமைப்பணியில் தொடரவே விரும்புகிறார். ஆனால் சிலர் வேண்டுமென்றே, விஷமனத்தனமான பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ஊழலற்ற ஆட்சியை அன்புமணியால் மட்டுமே தரமுடியும். மத்திய அமைச்சராக இருக்கும்போதே பல சாதனைகளை செய்தவர் அன்புமணி” என்று அவர் தெரிவித்துள்ளார்.