Home Featured நாடு அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில் இந்திரா...

அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி?

742
0
SHARE
Ad

(தேசிய முன்னணியும்-மஇகாவும், இந்திரா காந்தி குழந்தைகளின் மதமாற்றப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாவிட்டால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் விவகாரமாக அது  உருவெடுக்கும் என செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை) 

Indira Gandhi newகோலாலம்பூர் – இந்தியாவின் பிரதமராக இருந்து உலக சரித்திரத்திலும், இந்தியர்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர், ஜவகர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தியாவார்.

கடந்த சில தினங்களாக, இதே பெயர், மலேசியர்களின் உதடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

தனது அனுமதியில்லாமல் மதமாற்றம் செய்யப்பட்ட தனது மகளைத் திரும்பப் பெறப் போராட்டம் நடத்திவரும் இந்திரா காந்திக்கு எதிராக டிசம்பர் 31ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புதான் அதற்கான காரணம்!

தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகளாக மாறும்

நாடு முழுமையிலுமுள்ள இந்துக்களை மட்டுமல்லாது, முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினரையும் பாதிக்கும் விதத்திலான இந்த நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக அலை அலையாக வாக்குள் விழுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

BN-Logo-Feature2008ஆம் ஆண்டில், நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போது இந்தியர்களின் மனங்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரும் பிரச்சனை, ஆலய உடைப்பும் மற்றும் அதன் தொடர்பில் ஹிண்ட்ராப் தலைவர்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கிடைத்த சிறைவாசமும் ஆகும்.

அதன் காரணமாக, அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்தியர்களின் பெரும்பான்மையான வாக்குகள் தேசிய முன்னணிக்கு எதிராக விழுந்தன. ஓர் அரசியல் சுனாமி நடந்தேறி, தேசிய முன்னணி வரலாறு காணாத தோல்வியடைந்தது.

காலப்போக்கில், அன்றைய பிரதமர் துன் அப்துல்லா படாவியும் பதவி விலக நேர்ந்தது.

14வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திரா காந்தி பிரச்சனை முக்கிய இடம் வகிக்குமா?

எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலிலும் இந்திரா காந்தியின் வழக்குக்கு நிறைய எதிர்வினைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1mdb3ஏற்கனவே, தேசிய முன்னணியை ஆபத்தான அரசியல் கருமேகங்கள் சுற்றி வளைத்துள்ளன. 1எம்டிபி விவகாரம், நஜிப்பின் 2.6 பில்லியன் நன்கொடை விவகாரம், மொகிதின் யாசின் நீக்கம் ஆகியவை தொடர்பில் தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகள் பெருகும் என அரசியல் ஆரூடங்கள் கூறப்பட்டு வரும் வேளையில், இப்போது புதிதாக இந்திரா காந்தியின் வழக்கும் சேர்ந்து கொண்டுள்ளது.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், இந்திரா காந்தி விவகாரம் இந்தியர்களையோ, இந்துக்களையோ மட்டும் பாதிக்கின்ற விவகாரமாக அல்லாமல், ஒட்டு மொத்த முஸ்லீம் அல்லாத மதத்தினரையே பாதிக்கின்ற ஒன்றாக இருப்பதால், சீனர்கள், கிறிஸ்துவர்கள், சபா, சரவாக் மக்கள் என மற்ற இனத்தவரையும், மதத்தினரையும்கூட இந்த பிரச்சனையின் தாக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது.

சில முஸ்லீம் அமைப்புகள், முக்கிய மலாய் தலைவர்கள் கூட இந்திரா காந்திக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தேசிய முன்னணிக்கு சாதகமான 4 அம்சங்கள்

அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் தோல்வி முனையில் நிற்பது போன்ற நிலைமையில் இருக்கும் தேசிய முன்னணிக்கு இருக்கும் ஆறுதல் அம்சங்கள் மூன்றே மூன்றுதான்!

MIC Logo 298 x 295அம்னோதான் ஆளவேண்டும் என செயல்பட்டுக் கொண்டிருக்கும் மலாய் தீவிரவாத அமைப்புகள் – பாஸ் கட்சி எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இருந்து பிரிந்து நின்று, அம்னோவுடன் நெருக்கம் பாராட்டுவது – இந்தியர்களின் வாக்குகள் – சபா, சரவாக் வாக்குகள் – ஆகிய நான்கு அம்சங்கள்தான் அவை!

இதில் இப்போது இந்திரா காந்தியின் வழக்கால், இந்தியர்களின் வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணிக்கு எதிராக – 2008ஆம் ஆண்டில் நடந்ததைப் போலவே திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள கிறிஸ்துவ வாக்குகளும் தேசிய முன்னணிக்கு எதிராகத் திரும்பக் கூடிய அபாயம் நிலவுகின்றது.

எதிர்க்கட்சிகளும், ஹிண்ட்ராப் போன்ற அமைப்புகளும் இந்திரா காந்தி பிரச்சனையை தீவிரமாக கையிலெடுத்துக் கொண்டுள்ளன.

இதனால், மஇகாவும், பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருதலைக் கொள்ளி எறும்பாக இரண்டு பக்க மோதலில் நடுவில் சிக்கிக் கொண்டுள்ளது மஇகா.

M. Indira Gandhi, a Hindu, center, with her children Karan, 11, left, and Tevi, 13, in an undated family photo.ஆனால், இன்னும் காலம் கடந்து விடவில்லை!

அதிர்ஷ்டவசமாக, அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. அதற்குள்ளாக, இந்திரா காந்திக்கு ஆதரவாக கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலோ –

அல்லது மஇகா, நஜிப் மூலமாக தீவிர நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டாலோ –

இந்தியர்களின் ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஓரளவுக்காவது குறைக்க முடியும்.

நெகிரி மாநிலத்தைப் பின்பற்றுங்கள்…

இந்த பிரச்சனைக்குச் சிறந்த தீர்வாக, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் அண்மையில் நிறைவேற்றியிருக்கும் ஒரு சட்டத் திருத்தம் பார்க்கப்படுகின்றது.

18 வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்படும்போது, தந்தை, தாய் என பெற்றோர்கள் இருவரின் அனுமதியும் வேண்டும் – இல்லாவிட்டால், மதமாற்றம் நடைபெறாது – என்பது போன்ற சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் இப்போதிருக்கும் நிலைமையை மாற்றிவிட முடியும்.

14வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்திரா காந்தி விவகாரத்திற்கு ஒரு திருப்திகரமான தீர்வு காண முடியாவிட்டால் –

2008இன் 12வது பொதுத் தேர்தலில் எப்படி ஆலய உடைப்பும்-ஹிண்ட்ராப் போராட்டவாதிகளின் கைதும்- பொதுத் தேர்தல் முடிவுகளையே புரட்டிப் போட்டதோ –

அதே போன்று – இந்திரா காந்தி பிரச்சனையும் – 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நின்று, அந்தக் கூட்டணியை தோல்வியின் விளிம்பிற்கோ – அல்லது தோல்வி நிலைக்கோ கொண்டு போகக் கூடும்!

– இரா.முத்தரசன்