பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளை அவரது தந்தை மொகமட் ரித்வான் அப்துல்லா தன்னிச்சையாக முடிவெடுத்து இஸ்லாமாக மாற்றிய விவகாரத்தில் இன்று நீதிபதி பாலியா யூசோப் வாஹி தலைமையில் மூன்று பேர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற சட்டக்குழு விசாரணை நடத்தியது.
அதன் படி, பதிவதிகாரியால் வழங்கப்பட்ட மதமாற்ற சான்றிதழ், இஸ்லாம் மதம் நிர்வாக (பேராக்) சட்டம் 2004, நல்லொழுக்கம் சட்டப்பிரிவு 101 (2)-ன் கீழ், உண்மைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட திட்டவட்டமான ஆதாரமாகக் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
“துணைப் பிரிவு 2 -ல் அடிப்படையிலான எங்களது பார்வையில், மதமாற்ற சான்றிதழ் உண்மைகளில் அடிப்படையில் வழங்கப்பட்ட திட்டவட்டமான ஆதாரம் ஆகும். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதமாற்ற சான்றிதழின் தலைப்பான, “இஸ்லாமிய மதமாற்ற சான்றிதழ் – Perakuan Memeluk Islam” அதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களின் மதமாற்றத்தை தெளிவாகச் சொல்கிறது”
“பேராக் இஸ்லாமியத் துறையின் சார்பில் டாக்வா பிரிவின் தலைமைத் துணை இயக்குநரால் வழங்கப்பட்ட “இஸ்லாமிய மதமாற்ற சான்றிதழை – Perakuan Memeluk Islam” மேலும் ஆய்வு செய்ததில், புதிதாக இஸ்லாம் மதமாற்றம் செய்பவர்களுக்கென இருக்கும் முவால்லாஃப் பதிவலுவலகத்தில் அம்மூன்று குழந்தைகளின் மதமாற்றத்தின் உண்மைகளைக் கூறுகின்றது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி பாலியாவுடன், நீதிபதி படாரியா சஹாமிட் ஆகியோர் அக்குழந்தைகளின் தந்தை மொகமட் ரித்வானுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளதோடு, அவர்கள் இஸ்லாமை தழுவி இருக்கப்போகிறார்களா? இல்லையா? என்பதை ஷரியா நீதிமன்றத்தின் முடிவிற்கு தாங்கள் விட்டுவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தாயின் அனுமதி இன்றி பிள்ளைகளை மதமாற்றம் செய்திருப்பதும், பிள்ளைகள் தாங்களாக உறுதிப்படுத்திக்கொள்ளவோ அல்லது சத்தியப் பிரமாணத்தை வாசிக்கவோ தெரியாததால், இந்த இஸ்லாம் மதமாற்றம் சட்டவிரோதமானது என்று மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதிகளின் குழுவில் இடம்பெற்ற நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்கர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
எனினும், நீதிபதி பாலியாவும், மற்றொரு நீதிபதியும் ஒரே முடிவை எடுத்திருப்பதால், அதுவே பெரும்பான்மையாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.