கோலாலம்பூர் – மதமாற்ற விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளை சிறப்பு நீதிமன்றம் அமைப்பதால் தீர்த்துவிட இயலாது என்று மலேசியா ஷரியா வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மூசா ஆவாங் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்று, அங்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமிக்கும் போது மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாகிவிடும், காரணம் அந்தக் குழுவில் எத்தனை முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் முடிவுகள் மாறுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டு நீதிபதிகள் முஸ்லிமாக இருந்தால், அது மற்றொருவருக்கு திருப்தியில்லாமல் போய் அங்கு இதே போன்று இன்னொரு பிரச்சனை உருவாகும். எனவே இதற்கு ஒரு முடிவே இல்லை” என்று மலேசியாகினியிடம் மூசா தெரிவித்துள்ளார்.
இந்திராகாந்தி பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் தான் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதில் ஹமிட் சுல்தான் அபு பக்கார் தீர்ப்பு வழங்கியதை முன்வைத்து மூசா ஆவாங் மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்திற்கு தக்க தீர்வு என்னவென்றால், முஸ்லிம் அல்லாதவர்களையும் ஷரியா நீதிமன்றத்தில் நீதி கேட்க அனுமதிக்க வேண்டும் என்றும் மூசா குறிப்பிட்டுள்ளார்.