சென்னை – அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தேர்தலில் களப்பணியாற்ற ஜெயலலிதாவின் கட்டளைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழன மீட்பிற்காக, கொள்கையை கொண்டு சேர்க்க என்னை அரசியலில் ஈடுபட வைத்தவர் அம்மா. இப்போது தலைமையைச் சந்தித்து அதற்கான விளக்கத்தை அளித்து இருக்கிறேன்.”
“எங்களைத் தற்போது ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள, அம்மா ஆணையிட்டு இருக்கிறார். சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறோம். இங்கு சொற்பொழிவாளர்கள் மனநிறைவோடு இருக்க முதல்வர் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். இத்தனை ஆண்டுகால அரசியலில் இருந்தும், எனக்கு தேர்தல் அரசியல் மீது ஈடுபாடு இல்லை. நான் ஒரு சொற்பொழிவாளன். மக்களிடம் பேசுபவன். அதுதான் எனக்குப் பிடித்திருந்தது. மக்களிடம் அரசியல் பார்வையை ஏற்படுத்துவதே எனது நோக்கம். இன்னமும் அதற்கான பயணம் போய்க்கொண்டே இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
அவரை சிக்க வைத்த அதிமுக தேர்தல் வியூகம் குறித்த கேள்விக்கு, மிகுந்த கவனத்துடன், “எதிர்வரும் தேர்தல் என்பது அம்மாவின் முதல்வர் பதவியைப் புதுப்பித்துக்கொள்ளும் நேரமே. அதில் என்ன வியூகம் வைத்திருக்கிறார் என்பது எங்கள் தலைமை, எங்களுக்குத் தேவைப்படுகிற நேரத்தில் தெரிவிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.