கோலாலம்பூர் – வரும் ஜனவரி 24-ம் தேதி, தைப்பூசம் அன்று பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில், வெளிநாட்டினர் உட்பட சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆலய நிர்வாகத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் அறிக்கையின் படி, 165-வது ஆண்டு தைப்புசத் திருநாள் நிகழ்ச்சிகள் வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் துவங்கவுள்ளது.
சிலாங்கூர் நீர்பாசன மற்றும் வடிகால் துறையின் உதவியோடு, ஆலயத்தின் அருகேயுள்ள ஆற்றில் பிரார்த்தனைகள் சிறப்பாக நடத்த ஏதுவாக தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளதாகவும் பெர்னாமா தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்டது போல் மின்தடை ஏதும் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அது போன்ற எந்த ஒரு இடர்பாடுகளும் ஏற்படாது என்றும் ஆர்.நடராஜா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 22-ம் தேதி, இரவு 10 மணியளவில், ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பத்துமலைக்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானையோடு அமர்ந்திருக்கும் வெள்ளி இரதம் புறப்படும் என்றும் ஆர்.நடராஜா குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரதம் ஜனவரி 23-ம் தேதி, மதியம் 2.30 மணியளவில் பத்துமலையை வந்தடையும் என்றும், ஜனவரி 25-ம் தேதி நள்ளிரவில் மீண்டும் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திற்குக் கொண்டு வரப்படும் என்றும் நடராஜா தெரிவித்துள்ளார்.
தைப்பூச நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரை பத்துமலையைச் சுற்றி சுமார் 2,000 காவல்துறையினர் காவலுக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும், பேராவில் அருள் சுப்ரமணியர் ஆலயத்திலும், பினாங்கில் ஸ்ரீஅருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திலும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தைப்பூசம் கொண்டாடப்படும் என்றும் நடராஜா தெரிவித்துள்ளார்.