சென்னை – தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு இப்பதவியில் நீடிப்பார்.
தமிழிசை மீண்டும் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் நேற்று சனிக்கிழமை அறிவித்தார்.
பாஜகவை பொறுத்தவரை கட்சியின் அனைத்து நிலை பதவிகளுக்கும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2012ல் பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார்.
எனினும் 2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து கட்சிப் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தமிழிசை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது அவரது பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத் தலைவரை மாற்ற வேண்டாம் என பாஜக தலைமை கருதியதாகவும், அதன் காரணமாகவே தமிழிசைக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக தமிழக பாஜகவில் கவனிக்கத்தக்க பிரமுகர்களாக உள்ள ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலர் மாநிலத் தலைவர் பதவிக்கு முயற்சி செய்வதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
எனவே தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்ட நிலையில், தமிழிசை மீண்டும் மாநிலத் தலைவராகி உள்ளார்.