சென்னை – தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் பட்டியலில் இமான் அண்ணாச்சி புதிதாக இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– நான் பரம்பரையாக தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவன்.
ஆரம்பத்தில் நான் காய்கறி விற்ற காலத்தில் இருந்து தி.மு.க. கூட்டத்தில் கலைஞர் பேசுவதாக தெரிந்தால் போதும் உடனே எல்லா வேலையையும் தூக்கி தூரப்போட்டு முதல் ஆளாக அவர் பேச்சை கேட்க கிளம்பிவிடுவேன். அந்த அளவுக்கு தி.மு.க. மீதும் கலைஞர் மீதும் மரியாதை வைத்து இருந்தேன்.
அவரை நேரில் சந்திந்து ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு ஆறுமாசத்துக்கு முன்னால் அனுமதி கேட்டிருந்தேன். இப்போது அனுமதி கிடைத்தது, போனேன். அப்போது கலைஞர் நீ தி.மு.க.வில் சேர்ந்து வருகிற தேர்தலில் கட்சிப்பணி செய்ய வேண்டும் என்று சொன்னார். அதை மறுக்க முடியவில்லை. அதனால் தான் கட்சியில் சேர்ந்து விட்டேன்.
உடனே பிரச்சாரத்துக்கும் கிளம்புகிறேன். அரசியலை பொருத்தவரைக்கும் வாக்கு, நாக்கு என்று ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். இது சரியில்லைன்னா நமக்கே வினையா வந்து முடியும். என்னுடைய பிரச்சாரம் யாரையும் கொச்சைப்படுத்தி இருக்காது. மிகவும் ரொம்ப நாகரீகமாக இருக்கும். தலைவருடைய வேட்பாளர்களை ஆதரித்து பேசுவேன்.
அதே நேரம் தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி எப்படி மக்கள் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறது என்பதையும், நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டி பேசுவேன். தலைவர் கலைஞரும், தளபதியும் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நிறைய வழி முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எனவே எனது பிரச்சாரம் எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கி இருக்காது.
நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அப்படிப்பட எண்ணமும் வராது. எனக்கு இப்போது கொடுத்திருக்கும் ஒரே பணி, வரும் தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற வைப்பதற்காக தீவிர பிரச்சாரம் செய்வது. அதற்காக உழைக்கப்போகிறேன். அதை விட்டுவிட்டு அரசியலில் முழுமையாக இறங்க என்னால் முடியாது என அவர் கூறினார்.