Home இந்தியா அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் பாடப் பிரிவுகள் நீக்கம்- கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்

அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் பாடப் பிரிவுகள் நீக்கம்- கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்

984
0
SHARE
Ad

karunanithiசென்ன, மார்ச்.15- அரசுப் பணியாளர் தேர்வில் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழ் மொழி பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் திட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வியாழக்கிழமை இருவரும் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:-

#TamilSchoolmychoice

கருணாநிதி: –

அரசுப் பணிகளுக்காகத் தேர்வுகள் எழுதும் தமிழக மாணவர்கள் மீது தொடர்ந்து அடி மேல் அடி விழுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பாடத் திட்டங்களில் மாறுதல்களை அறிவித்துள்ளது. குழு2 மற்றும் குழு 4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்திலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் இருக்கிறது. குழு2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வில், பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.

குழு 4 தேர்வுகளில் தமிழ் பாடத்துக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் தொடர்பாக தேர்வு எழுதுபவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொது அறிவு மற்றும் பிற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அதைத் தமிழ் மொழிப் பகுதியில் கேட்கப்படும் எளிதான கேள்விகளால் அதிக மதிப்பெண் எடுத்து ஈடு செய்ய முடியும். தற்போது செய்யப்படும் மாற்றங்களால் அந்த வாய்ப்பு பறி போய்விடும் என்று தேர்வு எழுதுபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கது.

தமிழ் மொழி மூலம் கல்வி கற்று தேர்வெழுதும் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் எதிரானதாக உள்ளன என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் அவர் எழுதியிருக்கும் கடிதத்துக்கு முரணாகவே அமைந்திருக்கின்றன.

எனவே உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு தமிழ் மொழிக்கும், தமிழ் மாணவர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ, பின்னடைவோ ஏற்படா வண்ணம் அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்துள்ள பாடத்திட்ட மாற்றங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

ராமதாஸ்: – 

அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டம் தமிழ் உணர்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தால் தமிழ்நாட்டில் இனி தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவதால் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளைத்தான் அரசு வேலை பெறுவதற்காக ஏழை மாணவர்கள் நம்பியுள்ளனர்.

சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்குரிய முக்கியத்துவத்தைக் குறைத்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது. எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.