மும்பை – நேற்று டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் வரிசையில் மும்பையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒன்றாக கணிக்கப்படுகின்றது.
காரணம், வழக்கமாக, டி-20 போட்டிகளில் 200 ஓட்டங்களுக்குள்ளாக, முதல் பாதி ஆட்டம் முடிவடையும். ஆனால், நேற்று நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை (ரன்கள்) எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.
எனவே, கிரிக்கெட், டி-20 வரலாற்றில் இத்தகைய பெரிய எண்ணிக்கையிலான ஓட்டங்களை முறியடிக்கும் வண்ணம் திட்டமிட்டு விளையாடுவது மிகப் பெரிய சவாலாகப் பார்க்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவின் 229 ஓட்டங்கள் இலக்கை இங்கிலாந்து அடைவது முடியாத ஒன்றாக இரண்டாவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பார்க்கப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்து விளையாட்டாளர்கள் அபாரமாக விளையாடி, இரண்டாவது பாதி ஆட்டத்தில், 8 விக்கெட்டுகளை இழந்தாலும் 230 ஓட்டங்களை எடுத்தனர்.
கட்டம் கட்டமாக நகர்ந்து இறுதியில் இரண்டு பந்துகள் மட்டுமே இருக்கும் வேளையில் தேவைப்பட்ட ஒரே ஒரு ஓட்டத்தை எடுத்து, ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்தனர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆட்டம் டி-20 கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான ஆட்டமாகப் பார்க்கப்படுகின்றது. 40 ஓவர்களுக்குள் 459 ஓட்டங்கள் நேற்றைய ஆட்டத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன.