புதுடில்லி – தேசிய அளவிலான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ‘தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது என்பது தமிழ் இரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும், சில தகவல் ஊடகங்கள் எழுப்பிய சர்ச்சையினால் அந்தத் தேர்வில் சிறு நெருடலும் இருந்தது.
தேர்வுக் குழுவில் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன் இருந்ததால், அதன் காரணமாகத்தான் இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது.
ஆனால், தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்குப் பேட்டியளித்த கங்கை அமரன் (படம்) தேசிய அளவிலான தேர்வுகள் என்று வரும்போது பந்த பாசத்திற்கோ, நமது சொந்த விருப்பு வெறுப்புக்கோ இடம் கிடையாது, இது முழுக்க முழுக்க இளையராஜாவின் திறமைக்காக, அவரது படைப்புக்காகக் கிடைத்த பரிசு என்று கூறியிருந்தார்.
இது தொடர்பில் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த இந்திப் படத் தொகுப்பாளர் (எடிட்டர்) சஞ்சிப் தத்தா டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த கங்கை அமரன் அப்படியே இளையராஜாவுக்கு வாக்களித்தாலும் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இளையராஜாவின் பின்னணி இசைக் கோர்ப்பு என்பது எப்போதுமே மிகச் சிறப்பாக இருக்கும். இளையராஜா தேர்வு செய்யப்பட அவரது சகோதரரின் வாக்கும், ஆதரவும் தேவையில்லை” என சஞ்சிப் மேலும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் இளையராஜா தேர்வு செய்யப்பட்ட பிரிவில் கங்கை அமரன் வாக்களிக்கவில்லை என்றும் சஞ்சிப் தெரிவித்திருக்கின்றார்.
இறுதிக் கட்ட விவாதத்தின்போது கூட, கங்கை அமரன் கூட இருந்தாலும் இளையராஜா தேர்வின் போது வெளியில் இருந்தார் என்றும் சஞ்சிப் மேலும் கூறியிருக்கின்றார்.
தேசிய விருது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், 1000 படங்களைத் தாண்டி பீடுநடை போடும் இளையராஜாவின் தேர்வை – திறமையை யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்பதே உண்மை!