மாமண்டூர் – சென்னையை அடுத்துள்ள மாமண்டூரில் விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்த மக்கள் நலக் கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகளிடையே அச்சமும், அதிர்ச்சியும் பரவத் தொடங்கியுள்ளன.
காரணம், வழக்கமாக இது போன்ற பிரம்மாண்டமான கூட்டம் திமுக, அதிமுக கூட்டங்களுக்கு மட்டுமே கூடும். சனிக்கிழமை ஜெயலலிதா சென்னை தீவுத் திடலில் நடத்திய தேர்தல் பரப்புரையைவிட பிரம்மாண்டமானதாக மக்கள் நலக் கூட்டணியின் நேற்றைய கூட்டம் திகழ்ந்தது என அரசியல் பார்வையாளர்கள் வர்ணித்துள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடையே காணப்படும் நெருக்கம்
கூட்டத்தில் நீண்ட நேரம் பேசிய வைகோ மற்றும் மற்ற தலைவர்களின் உரைகளை, தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பிய வேளையில் கேப்டன் தொலைக்காட்சி இந்த நிகழ்வுகளை முழுமையாக நேரலையாக ஒளிபரப்பியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் அதிர்வலைகள் பரவத் தொடங்கியுள்ளன.
மாமண்டூர் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்…
6 கட்சிகளின் மெகா கூட்டணியாக உருவெடுத்துள்ள மக்கள் நலக் கூட்டணி எதிர்பாராத அளவுக்கு பிரம்மாண்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது. இத்தகைய கூட்டணியை திமுக, அதிமுக கூட உருவாக்க முடியவில்லை என்ற சூழ்நிலையில், அந்தக் கூட்டணித் தலைவர்களிடையே நிலவி வரும் சுமுகமான நட்பு, நெருக்கம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, அவர்களுக்குத் திரளும் பிரம்மாண்டமான ஆதரவாளர்கள் கூட்டங்கள் ஆகியவையும் மக்களையும், வாக்காளர்களையும் அவர்களை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சந்திரகுமார் அணியால் தேமுதிகவிற்கு பாதிப்பில்லை
அதிலும் குறிப்பாக, சந்திரகுமார் (படம்) தலைமையிலான தேமுதிக அதிருப்தியாளர்கள் விலகலால், தேமுதிகவிற்கு அவர்கள் பலத்த சேதங்களை அரசியல் ரீதியாக ஏற்படுத்துவார்கள் என ஒரு சில தரப்புகள் எதிர்பார்த்த வேளையில், சந்திரகுமார் குழுவினர் விலகி சில நாட்களுக்குப் பின்னர், ஜி.கே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் விஜயகாந்த் அணியில் வந்து இணைந்தது, மக்கள் நலக் கூட்டணியின் தோற்றத்தையும், பலத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
வாசன் இணைந்த அடுத்த நாளே நடத்தப்பட்ட மாமண்டூர் பொதுக்கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளம், குறிப்பாக திமுவினரிடையே சோர்வையும், தளர்வையும் ஏற்படுத்தியுள்ளன. காரணம், சந்திரகுமார் அணியினரைக் கொண்டு தேமுதிகவை உடைத்தது திமுகவின் வியூகம்தான், குறிப்பாக ஸ்டாலின் தலைமையின் தனிப்பட்ட அரசியல் வியூகமாக இது பார்க்கப்பட்டது.
சந்திரகுமார் தேமுதிகவினர் திமுக அணி பக்கம் செல்ல விரும்பினர் என்றும், அதற்குத்தான் கட்சியில் அதிக ஆதரவு இருந்தது என்று கூறிக் கொண்டும், வைகோவுக்கு எதிரான கருத்துகளை அள்ளி வீசிக் கொண்டும் இருந்ததைப் பார்க்கும்போது இதற்குப் பின்னணியில் இருப்பது திமுகதான் என்பது தெளிவாகவே தெரிந்தது.
அதற்கேற்ப, இன்று மாலை சந்திரகுமார் அணி, கருணாநிதியைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
மூன்றாவது இடத்திற்கு திமுக தள்ளப்படுமா?
நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டபோது…
இதுபோன்ற அரசியல் சூழ்நிலைகளினால்தான் மாமண்டூரில் நடத்தப்பட்ட மக்கள் நலக் கூட்டணியின் பரப்புரைக்குத் திரண்ட கூட்டத்தின் அளவு முக்கியத்துவம் பெறுகின்றது.
இதே போன்ற நிலைமை தொடர்ந்தால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது அதிமுகவுக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் இடையில்தான் என்பது போன்ற தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, திமுக அணி 3வது நிலைக்குத் தள்ளப்படக் கூடும் என்ற அச்சமும், பதட்டமும் அந்த அணியில் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை மாற்றியமைக்கும் விதத்தில் அரசியல் வியூகங்களை வகுக்க திமுக கூட்டணி மும்முரமாக இறங்கியுள்ளது என்றும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும், நேற்று பெரும் எதிர்பார்ப்புடன் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஏறத்தாழ அதே நேரத்தில் மாமண்டூரில் நடந்த மக்கள் நலக் கூட்டணியின் மாபெரும் கூட்டத்தைத்தான் தமிழகத்தின் தலையாய செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
மாமண்டூர் கூட்டத்தின் பிரம்மாண்டத்தால், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடும் அதன் உள்ளடக்க அம்சங்களும் ஒளி மங்கித்தான் போயின என்றாலும் அது மிகையில்லை.
-இரா.முத்தரசன்
செல்லியல் நிர்வாக ஆசிரியர்