சென்னை – பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவநாதனின் இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐஜேகே சார்பாக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், பொதுச்செயலாளர் ஜெயசீலன், தலைவர் கோவைத்தம்பி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
பின்னர், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான உடன்பாட்டில், பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ஐஜேகே தலைவர் கோவைத் தம்பியும் கையெழுத்திட்டனர்.
தேவநாதனின் இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது. தொகுதி உடன்பாடு ஏற்படாததால் விலகுவதாக புதிய நீதிக்கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.