கூச்சிங் – இன்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோன், அவரது கணவர் அஸ்முனி அப்துல்லா, ஆகிய இருவரும் அடங்குவர்.
இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரில் இந்த இருவரைத் தவிர, அந்த அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் சுந்தரம் அண்ணாமலை, கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய செம்பனை வாரிய உறுப்பினருமான டத்தோ வான் முகமட் கைரில் அனுவார் வான் அகமட், அவரது மெய்க்காப்பாளர் அகமட் சோப்ரி ஹாருண், ஹெலிகாப்டரைச் செலுத்திய விமானி கேப்டன் ருடோல்ப் ரெக்ஸ் ராகாஸ் – ஆகிய நால்வரும் அடங்குவர்.
இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
பெத்தோங் என்ற ஊரிலிருந்து கூச்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் செபுயாவ் என்ற இடத்தின் அருகில் பறந்து கொண்டிருந்த போது, மாலை 5 மணியளவில் இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நஜிப் கவலை
ஹெலிகாப்டர் காணாமல் போனது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
“தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவர்கள் நலமுடன் இருக்க பிரார்த்திப்போம்” என நஜிப் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.