கூச்சிங் – நேற்று ஐந்து பிரமுகர்களோடு காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. காவல் துறை, இராணுவம், தீயணைப்புத்துறை என அனைத்து தரப்புகளும் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ஈரோகோப்டர் ஏஎஸ்350 (Eurocopter AS 350) என்னும் ரகத்திலான அந்த ஹெலிகாப்டர் பெத்தோங் என்ற இடத்திலிருந்து மாலை 4.12 மணிக்குப் புறப்பட்டு கூச்சிங் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் புறப்பட்ட 20 நிமிடங்களில் அதன் தொடர்பு விடுபட்டுப் போனது.
ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு அதிரடிப் படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக நேற்றிரவு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஹாமிடி அறிவித்துள்ளார்.
இன்று காலை 6.00 மணி முதல் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுவரையில் அந்த ஹெலிகாப்டர் எங்கும் பத்திரமாகத் தரையிறங்கியதாகத் தகவல் இல்லை என்றும் வான் போக்குவரத்து தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
இராணுவமும், மலேசிய விமானப் படையும் தேடுதல் வேட்டையில் இணைந்து கொள்ள வேண்டும் என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் உத்தரவிட்டுள்ளார்.