கோலாலம்பூர் – பிரிட்டனைச் சேர்ந்த சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கில், மலேசியாவில் இருந்த போது, பயணம் செய்த இடங்களைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஹக்கில் மலேசியாவில் இருந்த போது, அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள குழந்தைகளைக் கண்டறியும் முயற்சியிலும் காவல்துறை இறங்கியுள்ளதாக புக்கிட் அமான் சிஐடி துணை இயக்குநர் (விசாரணை மற்றும் சட்ட விவகாரம்) துணை ஆணையர் டத்தோ லா ஹோங் சூன் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய நிலவரப்படி, நாங்கள் இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். பல்வேறு இடங்களுக்கு அவர் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் அவர்களைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றோம்” என்று நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லா ஹோங் சூன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லண்டனில் நடைபெற்று வரும் ஹக்கிலுக்கு எதிரான பாலியல் வழக்கில், வரும் திங்கட்கிழமை அவருக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.