Home அரசியல் சிலாங்கூர் இந்தியர் வாக்குகளைக் கவர பிரதமர் கிள்ளானுக்கு வருகை

சிலாங்கூர் இந்தியர் வாக்குகளைக் கவர பிரதமர் கிள்ளானுக்கு வருகை

607
0
SHARE
Ad

கிள்ளான், மார்ச்.18- சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான நஜிப் துன் ரசாக் நேற்று இந்தியர்கள் கலந்து கொண்ட ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கிள்ளானுக்கு வருகை தந்தார்.

சிலாங்கூர் ம.இ.கா ஏற்பாட்டில் காப்பார், ஜாலான் மேரு தம்பஹான், மேரு இடைநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘தேசிய முன்னணி மக்கள் தேர்வு’ என்னும் நிகழ்வில் பிரதமர் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

எதிர்வரும் 13ஆவது பொது தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்று புத்ரா ஜெயாவை தொடர்ந்து ஆட்சி செய்யும் என டத்தோஸ்ரீ நஜிப் மக்கள் முன்னிலையில் பலத்த ஆரவாரத்துக்கிடையில் கூறினார்.

#TamilSchoolmychoice

காப்பார் வட்டாரத்தில் பெரிய தமிழ்ப்பள்ளியாக விளங்கி வரும் காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளிக்கு நான்கு மாடி கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும்.

இப்போது அதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருவதாகவும் காப்பாரில் நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வரும் மின்சுடலை இல்லாத விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும்  பிரதமர் சொன்னார்.

இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக பகுதியாக விளங்கும் ஜாலான் துங்கு கிளானா, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் போல லிட்டல் இந்தியா அந்தஸ்து வழங்கப்பட்டு, இந்தியர்களின் தொன்மைமிக்க வர்த்தகத் தளமாக உருவாக்கித் தரப்படும் என்று மேலும் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியர்களின் பல்வேறு பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதில் தேசிய முன்னணி அரசாங்கம் முழு வீச்சாக செயல் பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு கோயிலைக்கூட தேசிய முன்னணி அரசு உடைத்தது கிடையாது என்றார்.

மேலும், இந்தியர்களுக்கு குடியுரிமை, அடையாள அட்டை, பிறப்பு பத்திரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமது அமைச்சில் பிரத்தியேகமான தனிப்பிரிவு ஒன்றை அமைத்து செயல்பட்டு வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

எனவே, வரும் பொது தேர்தலில், தேசிய முன்னணி அபரித வெற்றி பெறுவதற்கு இந்திய சமுதாயம் தேசிய முன்னணிக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், இந்தியர்களுக்கான அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டங்கள் பலன் அளிக்க தொடங்கி விட்டதாகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய சமுதாயம் கேட்டதையெல்லாம் வழங்கக் கூடிய நிலையில் பிரதமர் உள்ளார் என்றும் கூறினார்.

ம.இ.கா உயர்மட்ட தலைவர்கள், சிலாங்கூர் மாநிலத் தலைவர்கள், தொகுதி, கிளை பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் லாஹாட் டத்துவில் சுலு தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிர் துறந்த பாதுகாப்பு படையினரின் அறநிதிக்கு ம.இ.கா 80,000 வெள்ளி வழங்கியது. பிரதமர், தம் பங்காக மேலும் 20,000 வெள்ளி வழங்கி அந்நிதியை 1 லட்சம் வெள்ளியாக உயர்த்தினார்.