திருவனந்தபுரம், மார்ச்.18- சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட திருவிழா இன்று (18ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் பிரசாத சுத்தி, முளபூஜை நடந்தது. நேற்று மதியம் பிம்ப சுத்தி பூஜைகள் நடந்தன.
இன்று காலை 9.30 மணியளவில் தந்திரி தலைமையில் கொடியேற்று விழா நடக்கிறது. முன்னதாக கிழக்கு மண்டபத்தில் கொடி பூஜிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஸ்ரீகோயிலுக்கு எடுத்து வரப்படுகிறது.
விழாவையொட்டி கோயிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.