Home Featured நாடு காவல்துறையிடம் ஒப்படைத்த 12 மில்லியன் ரிங்கிட் எங்கே? – விடுவிக்கப்பட்ட சரவாக் மாலுமிகளின் குடும்பத்தினர் கேள்வி!

காவல்துறையிடம் ஒப்படைத்த 12 மில்லியன் ரிங்கிட் எங்கே? – விடுவிக்கப்பட்ட சரவாக் மாலுமிகளின் குடும்பத்தினர் கேள்வி!

855
0
SHARE
Ad

Sarawak hostagesசிபு – அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட சரவாக்கைச் சேர்ந்த 4 மாலுமிகளும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் நால்வரின் குடும்பத்தினர் இன்று வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், அந்த நால்வரையும் விடுவிப்பதற்காக வசூலிக்கப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடையையும் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 24-ம் தேதி, சபாவிலுள்ள சண்டாக்கான் காவல்துறை சிறப்புப் பிரிவில், 12 மில்லியன் ரிங்கிட்டை தாங்கள் ஒப்படைத்ததாக, கடத்தப்பட்ட மாலுமிகளில் ஒருவரான ஜானி லாவ் ஜங் ஹெயினின் மாமா டத்தோ லாவ் செங் கியாங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கடந்த மே 24-ம் தேதி, மாலை 4 முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், சண்டாக்கான் சிறப்புப் பிரிவிடம் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஹாங் லியாங் வங்கிக் காசோலை மொத்தம் 12 -ஐ ஒப்படைத்தோம். வசூலிக்கப்பட்ட மொத்த தொகையையும் அவர்களிடம் தான் கொடுத்தோம். அதில் நாங்கள் ஒரு செண்ட் கூட வைத்துக் கொள்ளளவில்லை” என்று செங் கியாங் தெரிவித்துள்ளார்.

எனினும், புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு இயக்குநர் ஆணையர் டத்தோஸ்ரீ மொகமட் ஃபசி ஹாருனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கருத்துக் கூற மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அந்தப் பணம் என்ன ஆனது என்பதனை நன்கொடையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் விரும்புவதாக செங் கியாங் தெரிவித்துள்ளார்.

அந்த 12 மில்லியன் ரிங்கிட் தொகையில், 9 மில்லியன் ரிங்கிட் நன்கொடையாளர்களிடமிருந்தும், 1 மில்லியன் ரிங்கிட் புலாவ் லி ஹுவாவில் இருந்த இரண்டு வீடுகளை அடமானம் வைத்தும், 2 மில்லியன் அந்த நால்வரும் பணியாற்றிய நிறுவனத்திடமிருந்தும் வசூலிக்கப்பட்டதாகவும் செங் கியாங் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் நால்வரையும் காப்பாற்ற பேஸ்புக் மூலமாக பொதுமக்களின் உதவிகளைக் கோரிய போது, பப்புவா நியு கினியா, தைவான், சீனா, சாலமன் தீவு மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பலர் நன்கொடை வழங்கியுள்ளனர்.

“பெரிய பெரிய தொகையை வழங்கிய நபர்கள் தங்களது பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை” என்று செங் கியாங் தெரிவித்துள்ளார்.

தங்களது நன்கொடை வழங்கிய அனைவருக்கும் அவர் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட அவர்கள் நால்வரும், கடந்த ஜூன் 8-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களை விடுவிக்க பிணைத்தொகை கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் மறுத்தார்.

அதனையடுத்து, அப்பணம் என்னவானது என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.