மும்பை – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீதான மும்பை காவல் துறையினரின் விசாரணை அறிக்கை மகராஷ்டிரா அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை மாநில முதலமைச்சர் தேவேந்திரா பட்நாவிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை குறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்த பட்நாவிஸ் இந்த அறிக்கையின்படி, ஜாகிர் தலைமையில் இயங்கி வந்த இயக்கம் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிர அரசு இந்த விசாரணை அறிக்கையைத் தற்போது ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து அறிவிக்கும் என்றும் பட்நாவிஸ் கூறியுள்ளார்.
வங்காளதேசத்தில் ஓர் உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை நடத்திய தற்கொலைத் தாக்குதல்காரன் ஒருவன், ஜாகிர் நாயக்கின் உரைகளால் தூண்டப்பட்டு அந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறியதைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசும், மாநில காவல் துறையும் ஜாகிர் மீதான விசாரணைகளை முடுக்கி விட்டன.
விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால், ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி திரும்பவும் இந்தியாவுக்குக் கொண்டு வரவும் தனது அரசு தயங்காது என்றும் பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.