கோலாலம்பூர் – ஐஎஸ் இயக்கத் தீவிரவாதத்தை நாட்டில் ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள மலேசியக் காவல் துறையினர் கடந்த சில நாட்களில் நான்கு மாநிலங்களில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9 நபர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
அவர்களில் இருவர் பூச்சோங் மொவிடா விடுதியில் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் அடங்குவர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்புப் பிரிவைச் சேர்ந்த காவல் துறையினர் கோலாலம்பூர், ஜோகூர், சபா, கிளந்தான் ஆகிய மாநிலங்களில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 9 வரையிலான கைது வேட்டையில் இந்தத் தீவிரவாதிகளைப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 17 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட வெளிநாட்டவர்கள் என்றும் காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், இன்று சனிக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட மொவிடா விடுதி (கோப்புப் படம்)
மொவிடா இரவு விடுதியில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இருவர், ஜாசாநிசாம் ரோஸ்னி மற்றும் முகமட் சைபுடின் முஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கிளந்தான் மாநிலத்தின் கோலக்கிராய் நகரிலுள்ள மலைப் பிரதேச வட்டாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொவிடா வெடிகுண்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இந்த இருவரும் கோலக் கிராய் பகுதியில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர் என்றும் காலிட் தெரிவித்துள்ளார். இவர்களைக் கைது செய்தபோது அவர்கள் கைவசம் இருந்த எம்67 வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டது.
இவர்கள் இருவரும் ஜோகூர் பாரு விடுதி ஒன்றைத் தாக்க அடுத்துத் திட்டமிட்டு வந்ததாகவும் காலிட் கூறினார்.