Home Featured நாடு “செப்டம்பர் 30 வரை காத்திருப்போம்! அதற்குப் பின்னர்தான் அடுத்த கட்ட அறிவிப்பு” – டான்ஸ்ரீ பாலா...

“செப்டம்பர் 30 வரை காத்திருப்போம்! அதற்குப் பின்னர்தான் அடுத்த கட்ட அறிவிப்பு” – டான்ஸ்ரீ பாலா உறுதிப்படுத்தினார்!

623
0
SHARE
Ad

Datuk S Balakrishnan

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளித்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தரப்பைச் சேர்ந்த டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், நேற்று தங்கள் தரப்பு தலைவர்களின் கூட்டம் நடைபெற்றதை உறுதிப்படுத்தியதோடு, மஇகா விவகாரத்தில் சுமுகமான தீர்வு காண்பதற்கு எதிர்வரும் செப்டம்பர் 30 வரை டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கு கால அவகாசம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில், தங்கள் தரப்பின் சார்பில் டத்தோ சோதிநாதன் சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதையும் பாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். “இரு தரப்பிலும் குழுவாகப் பேச்சு வார்த்தை நடத்துவதை விட, இருவர் மட்டுமே பேசி சுமுகமான முறையில் தீர்வு காண்பதே சிறந்தது எனக் கருதினோம். அதனால்தான் சோதிநாதன் மட்டும் சுப்ராவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்” என்றும் பாலகிருஷ்ணன் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

Dato S.Sothinathanமஇகாவுக்கு திரும்புவதற்கான எங்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நியாயமான முடிவு காணப்பட டாக்டர் சுப்ரா ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நஜிப்பும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால், தாங்கள் பொறுமையுடன் காத்திருக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

“செப்டம்பர் 30 வரை காத்திருப்போம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம். அதற்குப் பின்னரே எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுப்போம்” என்றும் தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், “புதிய கட்சி தொடங்குவதோ, மற்ற கட்சிகளில் சேருவதோ எங்களின் நோக்கமல்ல! மஇகாவுக்குத் திரும்புவதே எங்களின் நோக்கம்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில் எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் மீண்டும் கட்சிக்கு வெளியில் நிற்கும் கிளைகள் சந்தாப் பணம் செலுத்தி, வேட்புமனுத் தாக்கல் செய்ய மஇகா தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பழனிவேல் தரப்பினர் மஇகா மறுதேர்தல் விவகாரம் தொடர்பில் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு வழக்கின் விசாரணை எதிர்வரும் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.