புதுடெல்லி – பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும், ‘ஸ்கார்பியன்’ ரக நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, பிரஞ்சு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இரகசியங்கள் கசிந்தது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி, அந்த இரகசியங்கள் இந்தியாவிலிருந்து கசிந்தனவா? என்று ஆராயும் படி கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு, பிரான்சின் டிசிஎன்எஸ் என்ற நிறுவனத்துடன், 23 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த இந்தியா, அந்நிறுவனத்திடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்று, மும்பையில் உள்ள ‘மஜாகான்’ கப்பல் கட்டும் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்தது.
எதிரிகளின் ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பம் , கடலுக்கு அடியில் இருந்து எதிரிகளை தாக்குவது, எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் திறனுள்ள ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடியது என பல நவீன தொழில்நுட்பங்களுடன் அந்த நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில், மொத்தம் 6 நீர்மூழ்கிக் கப்பல்களில், முதல் நீர்மூழ்கி கப்பல் அனைத்து சோதனைகளும் முடித்து, இந்த ஆண்டு இறுதியில், இந்தியக் கடற்படையில், ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற பெயரில் சேர்க்கப்பட உள்ளது. மற்ற, ஐந்து நீர்மூழ்கி கப்பல்கள், வரும், 2020-ம் ஆண்டுக்குள் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.